பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புணரியல்


117


விரிந்தும் இடைநிற்கச் சொற்கள் புனருந் தொடர்ச்சியே எழுத்து வகையில் வேறுபாடுடைய வேற்றுமைப் புணர்ச்சி யென்பது ஆசிரியர் கருத்தாதல் நன்கு புலனாம். எழுவாயும் விளியும் எழுத்து வகையானன்றிச் சொற் பொருள் வகையான் வேறுபாடுடையவர்களின் சொல்லதிகாரத்து அவ்விரண்டையுங் கூட்டி வேற்றுமை எட்டென்றார். எழுத்ததிகாரத்து எழுத்திலக் கன அமைதியொன்றேகருதி வேற்றுமை ஆறென்றும், சொல்லதி காரத்து, எழுத்திலக்கண அமைதியோடு சொல்லிலக்கண அமைதியும் உடன்கருதி வேற்றுமை எட்டென்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இயல்பினைப் பகுத்துணர்தல் வேண்டும்.

     வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருயிற் 
     கொல்வழி யொற்றிடை மிகுதல் வேண்டும். (தொல்.114) 
   இது, மேற்கூறப்பட்ட வேற்றுமையுருபுகள் ஆறும் பெயர்ப் பின் வந்து புணருங்கால் இயல்பாகப் புணர்தற்குரிய ஐ, ஒடு, இன், அது என்னும் உயிர்முதல் உருபுகளை யொழித்துத் திரியும் இயல்புடைய வல்லெழுத்தை முதலாகவுடைய கு, கண் என்னும் இரண்டுருபிற்கும் உருபியலை நோக்கியதோர் கருவி கூறுகின்றது.
   (இ-ள்) வல்லெழுத்தை முதலாகவுடைய கு என்னும் நான்காம் வேற்றுமை யுருபிற்கும், கண் என்னும் ஏழாம் வேற்றுமையுரு பிற்கும், பொருந்தியவழி வல்லொற்று இடையே மிகுதல் வேண்டும் எறு.
   இன்ன ஈற்றின்முன் என நிலைமொழியை வரைந்து கூறாமையின் உயிரீறு மெய்யீறாகிய இரண்டினையுங் கொள்க.
   (உ-ம்)   மணி + கு = மணிக்கு 
             மணி + கண் = மணிக்கண் 
             வேய் + கு = வேய்க்கு 
             வேய் + கண் = வேய்க்கண், எனவரும். 
   ஒற்று மிகுதல்வேண்டும் எனப் பொதுப்படக்கூறவே வல்லொற்றும் மெல்லொற்றும் மிகுதல் பெற்றாம் எனக் கொண்டு, தங்கண், நங்கண் என மெல்லெழுத்துமிக்கன என்று உதாரணங் காட்டினர் உரையாசிரியர். மெல்லொற்று மிகுதலையுஞ் சேர்த்துரைத்தல் ஆசிரியர் கருத்தாயின் வல்லொற்றும் கிளையொற்றும் மிகும் எனப் பிரித்துரைப்பர். “வெல்லெழுத்து வருவழியொற்று இடைமிகுதல் வேண்டும்’ எனவே அவ்விடத்து மிகுவது வந்த வல்லொற்றேயாதல் தேற்றம்.