பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

தொல்காப்பியம்-நன்னூல்



   (உ-ம்) நாகினை, நாகினொடு, வரகினை, வரகினொடு என வரும். ஏனையவற்றொடும் இவ்வாறே இயைத்துரைக்க
   ‘முற்ற’ என்றதனால் வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான், கரியதனை என முறையே அத்தும் அன்னுமாகிய பிற சாரியை பெறுவனவுங்கொள்க’ என்பர் இளம்பூரணர்.
     நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும் 
     அப்பால் மொழிக எல்வழி யான. (தொல்.195) 

இது மேற்கூறியவற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்குகின்றது.

   (இ-ள்) நெட்டெழுத்தின் பின்னர் வருகின்ற குற்றுகரங் கட்கு இனவொற்று மிகத்தோன்றும்; அங்ஙனம் ஒற்று மிகத் தோன்றாத கசதபக்கள் ஈறாகிய மொழிகள் அல்லாதவிடத்து எ-று.
   எனவே டகார றகாரங்களை யூர்ந்த குற்றுகர மொழிகளே ஒற்று இரட்டிப்பன எனக் கொள்க.
   இவ்வாசிரியர் ஒத்த வொற்றை இனவொற்றென்றும் ஒத்த வொற்று இரட்டுதலை இனவொற்று மிகுதலென்றும் கூறினமை காண்க.
   (உ-ம்) யாட்டை, யாட்டொடு, யாற்றை, யாற்றொடு எனவரும்
   நாகு, காசு, போது, காபு என்றாற்போல்வன அப்பால் மொழிகள் எனவும், அவை இனவொற்று மிகாவாயின எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர்.
     அவைதாம் 
     இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. (தொல்.197) 
   இஃது எய்தியது விலக்கியது.
   (இ-ள்) அங்ஙனம் இனவொற்று மிகுவனதாம் இன் சாரியை பெறாது இயல்பாக முடியுஞ் செயற்கையையுடைய வென்று கூறுவர் புலவர் எ-று.
   முன் சூத்திரத்திற் காட்டின சாரியை பெறாமை காண்க.
   'செயற்கைய’ என்றதனால் இனவொற்று மிக்கன. யாட்டினை, யாட்டினொடு, எனச் சிறுபான்மை இன் பெறுதலும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர்.