பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தொல்காப்பியம்-நன்னூல்



கொள்ளற்கில்லை. ப ம முதலியவற்றின் வரிவடிவு இன்னதெனக் கிளந்து கூறாமலே ஆசிரியர் அவற்றின் வரிவடிவு வேறு பாட்டைக் கூறினாரென்றல் பொருந்தாததாம். அன்றியும் ப ம இவற்றின் வேறுபாடுரைக்கப் போந்த ஆசிரியர், தாம் எவ்வெழுத்துக்களுக்கு வரிவடிவு வேற்றுமை கூறுகின்றாரோ அவ்வெழுத்துக்கள் இவையென எடுத்துரைத்தன்றிக் கூறமாட்டார். மகரம் மேலைச் சூத்திரத்தாற்பெறப்படினும், அதனோடு வேறுபாடு கூற எடுத்துக் கொண்ட பகரத்தினை இச்சூத்திரத்து எடுத்துரையாமலே அவ்விரண்டிற்கும் வேறுபாடு கூறினா ரென்றல் எங்ஙனம் பொருந்தும்?

 இனி இச்சூத்திரவரி தனியே ஒரு சூத்திரமாக இருந்திருத்த லியலாது. என்னையெனின், இதனுட் கூறப்படும் விதி இன்னதற் கென்பது பெறப்படாத நிலையில் இதனை ஒரு சூத்திரமாக ஆசிரியர் வையார். பின்வரும் “மெய்யினியற்கை யுள்ளியொடு நிலையல்’ என்ற சூத்திரம் மெய்களின் பொதுவியல் புரைத்தலால் இவ்வரி அதனைத் தொடர்ந்ததாகாது. எனவே இத்தொடர், மேலைச்சூத்திரத்தினையே சேர்ந்ததாதல் வேண்டும். ஆகலின் இது மகரத்தோடு மகரக் குறுக்கத்திற்கு வரிவடிவு வேற்றுமை செய்கின்றது என்பதே பொருத்தமுடைத்து.
 இ-ள்) உட்பெறு புள்ளி-புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாற் பெறும் புள்ளி, உருவாகும்-மகரக் குறுக்கத்திற்கு வடிவாம். எ-று.
 மேலைச் சூத்திரத்து அரை மாத்திரையினின்றும் குறுகி இசையிடனருகி வருமெனப்பட்ட மகரக் குறுக்கத்தினை, அவ்வாறு குறுகாத அரை மாத்திரை பெற்று இயல்பான மகரத் தோடு பிரித்தறிந்து கொள்ளுதற்கு அறிகுறியாக வரிவடிவில் எல்லா மெய்களுக்கு முரிய புறத்துப்பெறும் புள்ளியொடு, இக்குறுகிய மகர மெய்க்கு வரிவடிவில் உள்ளே பெறும் புள்ளியே பொருந்திய வடிவாம் என்பதைக் குறிக்கவே இச்சூத்திரம் மேலைச் சூத்திரத்தோடு இயைத்துக் கூறப்பட்டது. இச்சூத்திரம் மகரக் குறுக்கத்தைப் பற்றியதாயினும் வரிவடிவு வேற்றுமை கூறுதல் காரணமாக வேறே பிரித்துக் கூறப்பட்டுள்ளது; ஒரு பொருள் நுதலியதே சூத்திரமாதலின் என்க


 மெய்களுள் ஒன்றாகிய மகரத்தின் குறுகிய நிலையை அறிந்து கொள்வதற்கெனவே அக்காலத்தார், எல்லா மெய்களும்