பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

129


நடத்தியவர்கள் மாணவர்கள் ஆவர். குறிப்பாக இன்றுள்ள ம.தி.மு.க. அவைத் தலைவர் எல். கணேசன், தற்போது மாவட்ட ஆட்சியராக உள்ள இராசமாணிக்கம், மா. நடராசன், நாவளவன், ஜீவா கலைமணி, மக்கள் தொடர்பு துணை இயக்குநர் திருச்சி பரதன் போன்ற பலர் மாணவர் மாநாட்டை நடத்திய முக்கியமானவர்கள் ஆவர்.

தஞ்சை மாணவர்
மாநாட்டில் நாயுடு!

அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா உட்பட அன்றைய தி.மு.க. தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றினார்கள். தி.மு.க. அல்லாத திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் தமிழ் மொழிப் பற்றால், இந்தியை எதிர்த்து தஞ்சை மாணவர் மாநாட்டில் வீர முழக்கமிட்டார்.

திரு. ஜி.டி. நாயுடு அவர்களின் ஒவ்வொரு பேச்சும், கருத்தும், பூம்புகார் நகரைத் தாண்டிப் பொங்கி எழுந்த வங்கக் கடல் அலைகள் திரண்டெழுந்து வந்து அலையொலிகளைக் கையொலிகளாக எழுப்பினவோ என்று எண்ணத் தக்க வகையில், அவருடைய பேச்சுகளுக்குத் தஞ்சை நகர் பாசறைத் திடலில் கூடியிருந்த தமிழ்ப் பெருமக்கள் தங்களது வீர ஒலிகளை விண்ணதிர, மண்ணதிர எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். ஜி.டி. நாயுடு அவர்களது தமிழ் வீர உரை அத்தகைய ஓர் எழுச்சியை எழுப்பியபடியே இருந்ததை நான்தான் 'முரசொலி' ஏட்டில் வெளியிட தஞ்சையிலிருந்து அஞ்சலில் அனுப்பினேன்.

சிவகங்கை இந்தி எதிர்ப்பு
மாநாட்டில் நாயுடு உரை!

அடுத்து அதுபோன்ற மற்றோர் இந்தி எதிர்ப்பு மாநாடு, மாணவர் மணிகளால் சிவகங்கை நகரில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டிற்கும், திரு. ஜி.டி. நாயுடு வந்து கலந்து கொண்டார்.

அந்த மாநாட்டில் திரு. ஜி.டி. நாயுடு ஆற்றிய வீர உரையில், மருது சகோதரர்கள் இங்லிஷ் தளபதியை எதிர்த்துப் போரிட்ட வாளோசை ஒலிகள் எதிரொலித்தன. வீராங்கனை வேலு நாச்சியாரின் வீர உணர்ச்சிகள் தமிழ் மாணவர்களைத் தட்டி எழுப்பி