பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


நிருவாகத்துக்கு வசதியாக இருக்குமோ அதற்கேற்றவாறு பல பிரிவுகளாகப் பிரித்து இயக்கினார் துரைசாமி. இவ்வாறு அவர் இயக்கியதால் தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் முறை சுலபமாக அமைந்தது எனலாம்.

இதற்கு முன்பு, யு.எம்.எஸ். என்ற யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்று குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அந்த மோட்டார் நிறுவனம் எவ்வாறு உருவானது என்பதையும் பார்ப்போம்.

கோவையில் நடைபெற்ற மோட்டார் தொழில் முதலாளிகளுக்குள் 1933-ஆம் ஆண்டில் பெரும் போட்டி நிருவாகம் ஏற்பட்டது. பெரிய முதலாளிகளுக்கு இதனால் எந்தவித நட்டமும் உண்டாக வில்லை. ஆனால், ஒன்றிரண்டு பேருந்துகள் வைத்துத் தொழில் நடத்தும் சிறு முதலாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு அவதியடைந்தார்கள். அதனால், அவர்களது மோட்டார் தொழில் பலவீனமாகி நலிந்து கொண்டிருந்தது.

சிறு சிறு பேருந்து முதலாளிகள் நலிவதையும், தொழிலில் நட்டமடைவதையும் கண்ட ஜி.டி.நாயுடு அவர்கள், அந்த சிறு முதலாளிகளின் துயர்களைத் துடைக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். திடீரென, மோட்டார் தொழில் முதலாளிகள் மாநாடு என்ற ஒரு மாநாட்டை நடத்துவதற்கு வேண்டிய வேலைகளைச் செய்து, அந்த முதலாளிகளுக்கு ஓர் அழைப்பை விடுத்து, எல்லாரையும் கலந்து கொள்ளச் செய்தார்.

திரு. ஜி.டி. நாயுடு அவர்களது அழைப்பை ஏற்று எல்லா சிறு சிறு பேருந்து முதலாளிகளும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டிற்கு வந்த சிறு முதலாளிகள் நிறுவனங்களை எல்லாம் ஒன்று சேர்த்து, யு.எம்.எஸ். என்ற ஓர் ஐக்கிய மோட்டார் தொழில் நிறுவனத்தை ஜி.டி. நாயுடு உருவாக்கினார்.

அந்த யு.எம்.எஸ். என்ற ஐக்கிய கூட்டுறவு மோட்டார் நிறுவனத்தில்; அந்தந்த சிறுசிறு முதலாளிகளின் முதலீட்டு விகிதப்படி, வரும் தொழில் லாபத்தை அவரவர் விகிதப்படி பிரித்துக் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, அதற்கேற்ப அந்த முதலாளிகள் நசிந்து போகாமல்; அவரவர் லாபங்களைப் பணமாகக் கொடுக்கவும் வழி செய்தார்.