பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அனைத்தாலும் நூறு அவதானம் செய்து பெற்ற சதாவதானச் சாதனையை விட ஒரு நாவாலேயே நூற்றுக்கும் அதிகமான அவதானங்களைச் செய்து காட்டிய சாதனை பாவலருக்குப் பெருமையல்லவா?

இருளெனும் குபிரின் குலமறுத்து அறநெறி விளக்க மறுவிலாது எழுந்த மகாமதியின் கதிர்கள் தோய்ந்து 'மகாமதி அமாவாசையற்றவராகி விடுகிறார்.

கோவை பாடிய வாயால் இந்தப் பாவையும் பாடி மாணிக்க வாசகராகிறார் செய்குதம்பிப் பாவலர்,

காய்ச்சீர்களால் நடக்கும் கணிப்பாடல்களின் கம்பீரம்; யாப்பு நட்டுவாங்கத்திற்குத் தவறாமல் அடிகளில் ஒலிக்கும் சந்தச் சலங்கையின் ஓசை; இழுத்த இழுப்பிற்கு எதுகை மோனைகளை ஏவல் கேட்கச் செய்யும் எஜமானத்தன்மை; ஆராய்ந்து தேர்ந்த வார்த்தை மணிகளின் அலங்கார அணிவகுப்பு; கனிந்த மொழிப்புலமையால் கசியும் நயரசம், அருட்தூதர் மீது பொங்கியெழும் அன்புணர்வு வரையும் அழகுக் கோலங்கள் - இவை எல்லாம் இல்லாமியத் தமிழ்ப் புலவர்கட்கிடையே பாவலருக்குத் தங்க ஆசனம் தந்துவிடுகின்றன.

வள்ளல் நபியின் வாழ்வும் வாக்கும் தமிழாக்கம் செய்யப்பட்டு விட்டன. கன்னித் தமிழில் ஒரு கவிதை ஹதீது’!

பாடல்களில்தான் எத்தனை நயம்! தகரப் படலங்களில் புலவர்கள் தங்கள்

iv