பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

நல்ல பிள்ளையார்


துக்கு எடுத்துக்கொண்டு போவேன்” என்று அவள் சொல்வாள். அம்மா அதைக் கேட்டுச் சிரிப்பாள்.

உண்மையிலே அவள் அப்படித்தான் செய்தாள். அவளுக்குக் கல்யாணம் ஆயிற்று. தன் கணவன் வீட்டுக்குக் கமலா போகும் போது அந்தப் பிள்ளையாரை எடுத்துக்கொண்டு போனாள். அங்கேயும் காலையில் எழுந்து நீராடியவுடன் அந்தப் பிள்ளையாரையும் நீராட்டி அலங்காரம் செய்வாள். அவளுடைய மாமியார் அதைக் கண்டு, ‘என்னடி இது ? சிறு குழந்தை மாதிரி இந்தப் பிள்ளையாரை வைத்துக்கொண்டு விளையாடுகிறாயே!” என்று கடிந்துகொள்வாள். கமலா அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வழக்கம் போல் அவருக்குப் பூச்சூட்டி மகிழ்வாள்.

பல தடவை சொல்லியும் கமலா பிள்ளையாரை விடாமல் வைத்திருப்பதைக் கண்டு மாமியாருக்குக் கோபம் வந்துவிட்டது. "இதைத் தூக்கி வீதியில் எறிந்து விடுகிறேன் பார் !’ என்று பயமுறுத்தினாள். "மாமி, மாமி, அப்படிச் செய்யாதீர்கள். இது போய் விட்டால் என் உயிரே போய்விடும்" என்றாள் கமலா.

"நீ எதற்குக் கல்யாணம் பண்ணிக்கொண்டாய் ? இந்தப் பிள்ளையாரையே கல்யாணம் பண்ணிக் கொள்கிறதுதானே ?’ என்று சீறினாள் மாமியார். அது கேட்டுக் கமலாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.