பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62 நல்வழிச் சிறுகதைகள்

இனிப்பானது. அதன் சுவைக்கு மேலான சுவையுள்ள பொருள் இந்த உலகத்திலேயே கிடையாது!’ என்று கூறியது வண்டு.

“பூ ! இவ்வளவுதானா ?” என்று அலட்சியமாகப் பதில் கூறியது காகம்.

“என்ன அண்ணா, பூ என்று சொல்லி விட்டீர்கள் ? பூவிலிருந்து கிடைக்கிற தேனுக்குப் பூவுலகிலேயே நிகரான ஒரு பொருள் கிடையாது. அதைக் குடிக்கும் போது வாய்க்குக் கிடைக்கிற சுவையும் வயிற்றுக்குக் கிடைக்கிற நிறைவும் உடலுக்குக் கிடைக்கிற ஊட்டமும் உள்ளத்திற்குக் கிடைக்கிற இன்பமும் அளவிட்டுச் சொல்ல முடியாது அண்ணா !” என்று தேனுண்ட மயக்கத்திலே வெறியோடு பேசியது வண்டு.

“வண்டுத் தம்பி, நீ கண்டது அவ்வளவுதான் ! என் வேப்பம் பழத்துக்கு மேலாகவா இதெல்லாம் ? வேப்பம் பழம் கிடைத்தால் இந்த உலகத்தில் வேறு உணவே எனக்கு வேண்டாமே ! நான் சோலையிலே நிறைய வேப்பம் பழம் சாப்பிட்டுவிட்டுத்தான் வருகிறேன். என்னிடம் உன் தேனைப் பற்றி அளக்காதே!" என்று கூறி விட்டுப் பறந்தது காகம்.

கருத்துரை :- சோலைக்குச் சென்ற வண்டு தேனைப் பற்றிப் பேசியது. காகமோ வேம்பைப் பற்றிப் பேசியது. உயர்ந்தவர்கள் ஒருவனிடமுள்ள நற்குணங்கண்டு மகிழ்ந்து அவற்றைப் போற்றிப் பேசுவர் ; தாழ்ந்தவர்கள் அவரிடமுள்ள தீய குணங்களையே எடுத்துப் பேசுவர்.