பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 109 தகுதியாகக் கருதி வாழவேண்டும். இவையே, நல்ல ஆண்மகன்’ என்று சொல்பவர்க்கெல்லாம் உரிய சிறந்த கடமையாகும்.

நிழல் மரம்போல இருப்பிடமும், பழமரம்போல உணவும் தந்து பேணவேண்டும் என்பது கருத்து. நிழன் மரம் தான் துயருறாது உதவும்; பழமரம் தான் துன்புற்றும் உதவும். அதுபோலவே இருநிலையினும் உதவுதல் வேண்டும் என்பதும் கருத்தாகும்.

203. அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரை

எடுக்கலம் என்னார் பெரியோர் - அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும், இல்லையே தன்காய் பொறுக்கலாக் கொம்பு?

மலையடுக்குகள் பலவற்றைக் கொண்ட நாட்டிற்கு உரியவனே! பெரியவர்கள், தம்மை நாடிவந்து புகலாக அடைந்தவர்களுக்கு உதவி, அவர்களை உயர்த்த மாட்டோம் என்று ஒருபோதும் சொல்லவே மாட்டார்கள். அடுத்தடுத்துப் பெரிதான காய்கள் மிகப் பலவாகக் காய்த்தபோதினும், தன் காய்களைத் தாங்காது தள்ளிவிடும் மரக்கிளை எதுவுமே இல்லை அல்லவா? அதுபோலத்தான், பெரியவர்களும், எவரையும் தம்மால் தாங்கமுடியாது என்று தள்ளி விடுவதில்லை.

‘மென்மையான சிறு கொம்பும், தன் பெரிய காய்கள் என்றதால் தாங்கும் சக்தியுடையதாவது போலத், தாம் தளர்ந்த நிலையினும், பெரியோர் வாடிவரும் தம் சுற்றத்தினருக்கு உள்ளன்புடன் உதவுவார்கள்’ என்பது கருத்து.

204. உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா,

சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை;-நிலைதிரியா நிற்கும், பெரியோர் நெறியடைய நின்றனைத்தால், ஒற்கம் இலாளர் தொடர்பு.

உலகத்தாரெல்லாம் அறியும்படியாக, முற்ற முழுக்கக் கலந்தவர்களாகப் புறத்தே விளங்கினாலும்கூடச் சிறுமைக் குணம் உடையவர்களுடைய உறவெல்லாம், சில நாட்களின் அளவே நிலைத்து நிற்கும். தம்முடைய தகுதியிலே மாறுதல் இல்லாது, நல்ல குணங்களினின்றும் பிறழாது நிலைபெற்றவர் களாயிருக்கும் பெரியோர்களுடைய தொடர்போ என்றால், யோகநெறியிலே நிலைத்து நிற்கின்றவரின் உறுதிப்பாட்டைப் போல, என்றும் நிலைமாறாது ஒரு சீராக நிலை பெற்றிருப்பதாகும்.