பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 173

கொண்டு, கோபத்தினாலே துன்பந்தரும் சொற்களைக் கூட்டிச் சொல்லி, அவர்களிடத்தே கடிந்து சொல்லாமற் போனால், பேதைமையாளனுக்கு நல்ல தினவானது அவனது நாக்கினை மிகவும் வருத்தும் போலும்,

‘பயனிருக்கிறதோ இல்லையோ, பிறரைப் பழித்துப் பேசாமற் போனால் மூடனுக்கு நாத்தினவு தீராது’ என்பது கருத்து.

336. தம்கண் மரபில்லார் பின்சென்று, தாம், அவரை

எம்கண் வணக்குதும் என்பவர்-புன்கேண்மை நற்றளிர்ப் புன்னை மலரும் கடற்சேர்ப்ப! கற்கிள்ளிக் கையிழந் தற்று. நல்ல தளிர்களோடும் கூடிய புன்னை மரங்கள் மலர்ந்திருக்கும் படியான கடற்கரைச் சோலைகளுக்கு உரிய அரசனே! தம்மிடத்திலே எவ்வகையான ஒரு முறைமையும் இல்லாதவர்களின் பின்னே சென்று, ‘அவர்களை எம்மிடத்தே வணங்கி நிற்கச் செய்வோம்’ என்று கூறுபவர்களுடைய அற்பமான உறவானது, கல்லைக் கிள்ளிக் கையைப் போக்கிக் கொண்டது போன்றதாகும்.

“அற்ப குணமுள்ள மூடரை எவராலும் திருத்த முடியாது’ என்பது கருத்து. அவருடைய உறவு கொள்பவருக்குத் தீங்காகவே முடியுமென்பது தேற்றம்.

337. ஆகாது எனினும் அகத்து நெய் உண்டாகின், போகா தெறும்பு புறஞ்சுற்றும்,-யாதும் கொடாஅர் எனினும், உடையாரைப் பற்றி விடாஅர், உலகத் தவர்.

ஒரு பாத்திரத்தின் உள்ளே நெய் இருக்குமானால் அது தமக்குக் கிட்டாததேயானாலும் அந்தப் பாத்திரத்தை விட்டு அகன்று போகாமல் எறும்புகள் அதன் வெளிப்புறத்திலேயே விடாமற் சுற்றிக் கொண்டிருக்கும். அதுபோலவே, செல்வம் உடையவரை அவர் எதுவும் கொடாதவரே என்றாலும், உலகத்திலுள்ள பேதை மாக்கள் அவர்களைப் பற்றிக் கொண்டிருப்பாரே யன்றி, விட்டு நீங்கவே மாட்டார்கள்.

‘பேதைகள் உலோபிகளான செல்வர்களைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள் என்பது கருத்து.