பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 189 காமத்துப் பால்

உயிர்க்கு உறுதிப் பொருள்களாவன நான்கு அவை, அறம், பொருள், இன்பம், வீடு என்பன. எவ்வகையானும் நிமித்தம் கூறும் முறையாலன்றி, இலக்கணம் கூறும் முறையால் வீடு விளக்கப்படுவது ஆன்றோர் நூல்களின் மரபன்று. எனவே அதனை நீக்கிப் பிற மூன்றையுமே கூறுவன தமிழ் அறநூல்கள்.

அவற்றுள், அறமும் பொருளும் பற்றிய செய்திகள் இதுவரை காட்டப்பெற்றன. இனிவரும் மூன்று அதிகாரங்கள் இன்பம் பற்றிய உண்மைகளைக் கூறுவனவாம்.

பொருளால் பெற்றுத் துய்க்கப்படுவதான இன்பங்கள் பல; எனினும், அவற்றுள் எல்லாம் சிறப்புடையதாக மதிக்கத் தக்கது காம இன்பமே ஆகும். ஏனெனில் அதுவே ஐம்புலன் களாலும் ஒருங்கே ஒருசமயத்தே அநுபவிக்கத்தக்க சிறப்புடைய தாகத் திகழ்வது.

இப்பகுதியின் முதல் அதிகாரம் இன்பதுன்ப இயலாகவும், இறுதி இரண்டு அதிகாரங்கள் இன்பஇயல் ஆகவும் வகுக்கப் பட்டிருக்கின்றன.

1. இன்பதுன்ப இயல்

காம இன்பத்தினும் ஒருசார் இன்பம் தருவதாகவும், மற்றொருசார் துன்பந் தருவதாகவும் விளங்கும் தன்மைபற்றிக் கூறுவது இந்தப் பகுதியாகும்.

மனமொத்த மனைவியுடன் கூடி வாழுகிற இன்பச் செவ்வியினும் மனத்தாற் கலந்து உறவாடாமல், பொன்னுக்கும் பொருளுக்குமே ஆடவர் பலருடன் கூடி வாழும்போது மகளிரின் உறவே, இந்தத் தன்மையின் முழு இயல்பையும் எடுத்துக் காட்டுவதாகும்.

பொன்னும் பொருளும் கொடுத்து அனுபவிக்கும் ஒருவன் மீதும் அவர்க்கு உள்ளார்ந்த பற்றில்லாத காரணத்தால், அப்படி அவன் தருகிற சமயங்களுள், அவர்கள் அவனுக்கு இன்பந் தருபவராக விளங்கினும், அவன் தரவியலாது போயின காலத்தும், அன்றி அவனினும் மிகுதிப்படப் பிறர் தர முன்வந்த காலத்தும், அவர் அவனை இழித்துப்பேசி ஒதுக்கி விடுவர். இப்படி இன்பமும் துன்பமும் அமைந்த தன்மையால் இது இப்பெயர் பெற்றது.