பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நாலடியார்-தெளிவுரை

மலையின் மேலாகத் தோன்றும் முழுநிலவினைப் போலத் தமது பட்டத்து யானையின் தலையின் மேலாக எடுத்துக் கொள்ளப்பட்ட வெண்கொற்றக் குடையினராக விளங்குபவர் பேரரசர்கள். அவர்களும் இந்த உலகத்திலே இறந்தவர்கள் என்று பலரும் அறியக் காட்டி இகழப் பட்டவர்களே யாவர். அஃதன்றி, அந்தச் சாவாகிய இகழ்ச்சிக்குத் தப்பினவரென்று எவருமே இவ்வுலகில் இதுவரை இல்லை.

எவ்வகையான வசதிகளும் உடலைப் பேணுவதற்கு உடையவரான அரசரும் இறப்பர். எனவே, ஏனையோரும் இறப்பர் என்று சொல்லி, யாக்கை நிலையாமை கூறப்பட்டது. எஞ்சினார்-சாவுக்குத் தப்பி நிலையான வாழ்வு பெற்றவர்.

22. வாழ்நாட்கு அலகா வயங்குஒளி மண்டிலம்

வீழ்நாட் படாஅது எழுதலால், - வாழ்நாள் உலவாமுன் ஒப்புரவு ஆற்றுமின், யாரும் நிலவார், நிலமிசை மேல். உங்களுடைய ஆயுள் நாட்களுக்குக் கணக்கிடுவது போல, ஒளி விளக்கமுடைய ஞாயிற்று மண்டிலம், உதித்த லில்லாத வீழ்நாள் ஏற்படாதபடி தவறாது உதயமாகின்றது. அதனால், வாழ்நாள் அழிந்து போவதற்கு முன்பாகவே உங்கள் கடமையான அறங்களைச் செய்து நல்வாழ்வுக்கு வழிதேடுங்கள். இந்த உலகத்தின்மேல், எத்தகையவரேயானாலும் நிலையாக நிலைபெற்றிருக்க மாட்டார்கள் என்பதை உணருங்கள்.

நாளைக்கென்று நீங்கள் ஒதுக்கிக் கொண்டே போனால், நாள் உங்களுக்காகக் காத்திராது; அது போய்க்கொண்டே இருக்கும்; சாவும் எதிர்பாராது வந்தாலும் வந்துவிடும். அதனால், அறத்தை உடனே செய்வீர்களாக என்பது இது. அலகு கூறுபடுத்திக் கணக்கிடுதல். வயங்குதல்-விளங்குதல். படா அது - தவறாது. ஒப்புரவு என்பதனைத் துறவறம் எனக்கொண்டால் நிலமிசை என்பதை வீட்டுலகம் என்க. வாழ்நாள் கழியாமுன் துறவறம் மேற்கொண்டு நிலையான இன்பம் பெறுக’ என்பது கருத்து.

23. மன்றம் கறங்க மணப்பறை யாயின,

அன்றவர்க் காங்கே, பிணப்பறையாய்ப், - பின்றை

ஒலித்தலும் உண்டாம் என்று, உய்ந்துபோம் ஆறே

வலிக்குமாம், மாண்டார் மனம்.