பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெருவுக்குப் போய் விளக்கடியில் உட்கார்ந்து படித்தார். நாமோ தெருவிளக்கை வீட்டுக்குக் கொண்டு வந்து வைத்துப் படிக்கிறோம். எப்படியானாலும், எங்கே இருந்தாலும் தெருவிளக்கு தெருவிளக்குத் தானே! அதனாலே பிற்காலத்தில் நாமும் உயர்ந்த நிலை அடையலாம் என்று குற்றாலம் பிள்ளை பெரும்பேச்சுப் பேசுவார். இந்த விதமாக இரண்டு வருடங்களில் அதிகமான நாவல்களை படிக்கமுடிந்தது. பள்ளிக்கூடப் பாடங்கள் படித்து எழுத வேண்டிய 'வீட்டு வேலை (ஹோம் ஒர்க்குகளை எழுதி முடித்த பிறகு நான் பலரகமான புத்தகங்களையும் படிப்பதில் ஆர்வம் உடையவனாக இருந்தேன். மேல் வகுப்புத்தமிழ்ப் பாடநூல்கள்,துணைப் பாடங்களாக அமையும் கதைப் புத்தங்கள், கல்லூரி மாணவர்கள் படிக்க வேண்டி யிருந்த தமிழ் நாடகங்கள் மற்றும் துணை நூல்கள் எல்லாம் எனக்கு படிக்கக் கிடைத்தன. கிடைத்ததை எல்லாம் நான் உற்சாகத்துடன் படித்தேன். விளையாட்டில் எனக்கு ஆர்வமோ நாட்டமோ இருந்ததில்லை. மேலும், நான் உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருந்தபோதும், நன்கு உடல் வளர்த்தி இன்றி, சின்னப் பையன் மாதிரியே தான் இருந்தேன். இருப்பினும், விளையாடும் தெருச் சிறுவர்கள் என்னை வயதில் மூத்திருந்ததால் பெரியபையன் என்று தங்களோடு சேர்த்துக் கொள்ளாது ஒதுக்கினார்கள். பெரியவர்களோ என்னை சின்னப் பையன் என்று கருதி விலக்கினார்கள். நான் நோஞ்சான் ஆகவும், இயல்பால் மிகுந்த கூச்சம் உடையவனாகவும் இருந்தேன். பிறருடன் சேர்ந்து பழகாது தனியாக ஒதுங்கி இருப்பதே எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. அதனால் புத்தகங்களை விடாது படிப்பதே எனக்கு நல்ல பொழுதுபோக்கு ஆயிற்று. புத்தகங்களையே எனது நண்பர்கள் என மதித்தேன். 'ஆனந்த விகடன் பத்திரிகை படிக்கக் கிடைத்தது. அண்ணன் கோமதிநாயகத்துடன் படித்த மாணவன் ஒருவன் வீட்டில் விகடன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். வீட்டில் எல்லோரும் அதைப் படித்து முடித்த பிறகு அந்த நண்பன் அந்த இதழை அண்ணனுக்குப் படிக்கத் தருவதை வழக்கமாக்கிக் கொண்டான். சில சமயம் இரண்டு மூன்று வாரத்திய இதழ்கள் சேர்ந்து கிடைக்கும் அவற்றை படித்து விட்டு நாங்கள் அவற்றை திருப்பிக் கொடுத்துவிடுவோம். இவ்வாறு பல வருடங்கள் நிகழ்ந்தது. நிலைபெற்ற நினைவுகள் : 1.19