பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் மகிழ்ச்சிகரமாகவே போய்க்கொண்டிருந்தது. ஊரில் இருந்து அண்ணன் அவ்வப்போது கடிதம் எழுதுவார். நானும் கடிதங்கள் எழுதினேன் மாதம் தோறும் வீட்டுக்குப் பணம் அனுப்பினேன். ஆபீஸ் வாசலில் நின்றால், சிறிது தொலைவில் ரயில்வண்டி போவதும் வருவதும் தெரியும் ஊரில் இருந்து என்றைக்காவது யாராவது என்னை பார்க்க வரலாம் என்ற நினைப்பு மனசில் எழும். அப்படி யாரும் வருவது சாத்தியமில்லை, பொருளாதார சிரமங்கள் உண்டு என அறிவு சொல்லும் இருப்பினும் தனிமை வாழ்வில், மனம் ஆசைப்படும் அவ்விதம் நிகழலாம் என்று. அந்த ஊரில் நான் வசித்த இரண்டு வருடங்களில், ஊரிலிருந்து யாரும் என்னை பார்க்க வரவில்லை. நானும் ஒரு முறை கூட திருநெல்வேலிக்குப் போகவில்லை. வேறு எந்த ஊருக்கும் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ராமேசுவரம் பக்கம் போகிற ரயில்வண்டிகள், என்றாவது ஒருநாள் நானும் இதில் ஏறிப்போய் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் பாலம் எல்லாம் பார்த்து வர வேண்டும் என்ற ஆசையை மனசில் ஏற்படுத்தும் ஆனாலும் ஒரு தடவை கூட அது நிகழ்ந்ததில்லை. ஒருமுறை ஆபீஸ் விஷயமாக ராமநாதபுரம் போய் வந்தேன். மதுரைக்கு இரண்டு தடவைகள் போய்வந்தேன். ஆபீஸ் விசேஷ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஒரு முறை: டைப் ரைட்டிங் பரீட்சை எழுதுவதற்காக ஒருமுறை. இவ்வளவுதான் இரண்டு வருட காலத்தில் நிகழ்ந்த எனது வெளியூர் பயணங்கள். மனம் என்னவோ ஊர்கள் சுற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு தான் இருந்தது. ஒருசமயம் சென்னையிலிருந்து சக்திதாசன் சுப்பிரமணியன் திடீரென வந்து சேர்ந்தார். லோகசக்தி, பாரத சக்தி பத்திரிகைகள், லோக சக்தி வெளியீடுகள் ஆகியவற்றை விற்ற பணத்தை நீண்டகாலமாக பரமக்குடி ஏஜன்ட் அனுப்பவில்லை. இப்படிப் பல ஊர்களின் விற்பனையாளர்களும் பாக்கி வைத்திருந்தார்கள். ஊர்ஊராகப் போய், சம்பந்தப்பட்ட ஏஜன்டுகளைக் கண்டு பேசி, பணத்தை வசூல் பண்ண வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். நிலைபெற்ற நினைவுகள் 3 199