பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது ஆறாவது வயசில், நாங்கள் பெருங்குளத்தில் வசித்தபோது, போனதற்குப் பிறகு இப்போது தான் எனது இருபத்து ஓராவது வயசில் மறுபடியும் திருச்செந்தூர் போனேன். பதினைந்து வருடங்களில் அந்த ஊர் பெரிய மாறுதல்களைப் பெற்றிருக்கவில்லை. சாதாரண கிராமமாகத் தான் இருந்தது. கோயில் பக்கம் தான் ஆள்களின் நடமாட்டமும் சிறிது பரபரப்பும் இருந்தது. பிற்காலத்தில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் அப்போது ஏற்பட்டிருக்க வில்லை. பயணிகள் தங்குவதற்கு வசதியான லாட்ஜுகள் மற்றும் குறைந்த வாடகை அறைகளைக் கொண்ட கட்டிடங்கள் முளைத்திருக்கவில்லை. பிரகாரத்தில் காங்கிரீட் தளம் தலைகாட்டவில்லை. மணல் பரப்பு சுத்தமான விசாலப் பெரும் வெளியாகவே கிடந்தது. சர்வசாதாரண நாள் அது. கடைசி வெள்ளிக்கிழமை, கிருத்திகை போன்ற விசேஷ தினமாக இருந்திருப்பின், கூட்டம் சற்று மிகுதியாக இருக்கும் அன்று கூட்டமே இல்லை. சத்திரத்தில் தங்குவதற்கு வசதியான அறை கிடைத்தது. நாங்கள் அன்று இரவு அங்கேயே தங்கினோம். கோயில் தரிசனத்தை விட அலைபாயும் கடலின் காட்சி என்னை அதிகம் வசீகரித்தது. மறுநாள் அதிகாலையில் வந்து கடலில் சூரியன் உதயமாகும் அற்புதக் காட்சியைக் காணவேண்டும் என்று தீர்மானித்தேன். அதிகாலையில் எழுந்து வந்து கடலில் நீராடினோம். அந்தத் தண்ணின் பிசுபிசுப்பைப் போக்குவதற்காக, நாழிக் கிணற்றில் நீர் மொண்டு செளகரியமாகக் குளித்தோம். கோயிலினுள் சென்று சாமி தரிசனம் செய்தோம். பிறகு வெளியே வந்து கடலைப் பார்த்தபடி காத்திருந்தோம் உதய சூரியனின் அழகுத் தோற்றத்தைக் காண்பதற்காக குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. அம்மாவுக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், சூரியன் வருவதை பார்த்து விட்டுப் போகலாம் என்று நாங்கள் சொன்னதால், குளிரை சகித்துக் கொண்டு நின்றாள். கீழ்வானத்தில் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இருள் மாறியது. வெளிச்சம் படரலாயிற்று. செவ்வொளி ரேகை பரப்பியது. அடிவானம் ஒளிமயமாயிற்று வண்ணமும் வனப்பும் பெற்றது. அதன் பிரதிபலிப்பாய் கடல் நீரும் எழிற்கோலம் கொண்டது. சூரிய வட்டத்தின் பிரகாசமான 234 38 வல்லிக்கண்ணன்