பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பாட்டும் தொகையும்

மொழியப்படுகின்றன. மூன்றாம் பகுதி, திருவாவினன் குடிப்பகுதியாகும். இஃது இன்று பழனி எனப்படும். அன்று சித்தன் வாழ் மூதூர் என்றும் இப்பதி வழங்கப் பட்டது. முருகனை வழிபடும் முனிவர்களுடைய ஒழுக்கம், தேவர்கள் சூழ அவனைக் காண வரும் மகளிர் இயல்புகள், திருமால் முதலியவர்களைப் பற்றிய செய்திகள் இப்பகுதி யில் இடம்பெறுகின்றன. நான்காவது பகுதியாகிய திருவேரகப்பகுதியில் அந்தணர்தம் இயல்பும் முருகனை அவர்கள் வழிபாடாற்றும் திறமும் கூறப்படுகின்றன.

இருமூன் றெய்திய வியல் பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்கவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த மூத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழு தறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர வுடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி
நாவியன் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்து
ஏரகத் துறைதலு முரிய னதா அன்று

-திருமுருகாற்றுப்படை : 177-189

ஐந்தாம் பகுதி, குன்றுதோறாடல் என்பதாகும். இப்பகுதியில் மலையில் வாழும் குறவர்கள் அயரும் குரவைக்கூத்தும், முருகனை வணங்கும் மகளிர் இயல்பும் பேசப்படுகின்றன. ஆறாவதான இறுதிப்பகுதி பழமுதிர் சோலைப்பகுதி யாகும். இப்பகுதியில் அவன் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.