பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

பாப்பா முதல் பாட்டி வரை

கற்றுக் கொள்கிறது என்பதைவிட்டு, அது தானே கல்வியைக் கற்றுகொள்ளக் கூடியது என்று இம் முறை கருதுகிறது. எடுத்துக்காட்டாக, ஆசிரியர் குழந்தைக்கு ஒரு கதையைச் சொன்னால், குழந்தை அக் கதையைத் தன் சொந்த வார்த்தையினால் சொல்லுவதோடு, பாக்கள், சைகைகள், படங்கள் மூலம், கடிதம், களிமண் முதலிய பொருள்களினால் சிறிய சாமான்களைச் செய்து காட்டல் மூலமும், விளக்கும் என்று அவர் கூறினார்.

முதன் முதலில் ஏற்படுத்தப்பட்ட கிண்டர் கார்ட்டன் பள்ளிகளில் தாம் வகுத்த முறைப்படி கற்பிப்பதற்காக, புரோபெல் பத்துக் கல்விக் கருவிகளைப் பயன்படுத்தினார். அவை, புரோபெல், கல்வி முறைக்கு அளித்த நன்கொடைகள் எனப்படும். ஆனால், பிற்காலத்தில், இவை, புரோபெல் எதிர்பார்த்த முறையில் பயன்படாமல் போனதால், இப்போது கைவிடப்பட்டன.

குழந்தைகளுக்கு ஒரு மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர், அதைத் திருத்தமாகவும், பிழையில்லாமலும் பேச வேண்டுமென்றும், ஆசிரியர் மழலை மொழியில் பேசினால், குழந்தை சரியாகப் பேசக் கற்றுக்கொள்ளாது போகும் என்று புரோபெல் வற்புறுத்திக் கூறினார். கதைகளும், பாட்டுக்களும், குழந்தையின் மொழி வளத்தைப் பெருக்க உதவுமாதலால், கிண்டர் கார்ட்டன் பள்ளியில் இவைகளுக்குத் தனிச்சிறப்பு அளிக்கப்படும்.

பள்ளிக்கு வெளியே தோட்டத்தில் விளையாடுவது, இயற்கையுடன் நெருங்கிய தொடர்பைக் குழந்தைகளுக்கு உண்டாக்கும். குழந்தைகள் சொற்களைக் கற்றுப் புத்தக வாயிலாக அறிவு பெறுமுன்னர், பொருள்களுடன் பழகி அறியும் அறிவைப் பெற வேண்டும் என்பதும், வெறும் அறிவை விட, அறிவு பெறும் முறையே முக்கியமானது என்பதும் இக் கல்வி முறையின் அடிப்படைத் தத்துவமாகும்.