பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

பாப்பா முதல் பாட்டி வரை

குழந்தை துணியில் சிறுநீர் பெய்துவிடாமல் செய்வது கடினமான செயல். பொதுவாகக் குழந்தை விழிக்கும் வேளைகளிலெல்லாம் சிறுநீர் பெய்யும். அதனால், குழந்தை விழிப்பதற்காக நெளியும்போதே, அதை எடுத்து வெளியே பிடித்துவிட்டால் துணி நனையாது.

குழந்தையை எப்போதும் தனியாகவே உறங்கவைக்க வேண்டும். தாயின் பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்ளலாகாது. குழந்தை காற்றோட்டமுள்ள இடத்தில் உறங்கவேண்டும். ஆனால், காற்று அதன் மீது நேராக வந்து படக்கூடாது. குழந்தை உறங்குமிடம் இருட்டாயிருத்தல் நல்லது. குழந்தையின் படுக்கையை நாள்தோறும் நன்றாகக் காற்றில் உலர்த்த வேண்டும். சிறுநீர் பெய்த துணிகளைத் துவைத்துத் தூய்மை செய்யாமல், உலர்த்தி மட்டும் பயன்படுத்திவிடலாகாது. குழந்தைக்காகப் பயன்படுத்தும் எந்தத் துணியும், நன்றாக உலர்ந்ததாக இருக்க வேண்டும். சிறிது கூட ஈரம் இருத்தலாகாது. குழந்தையைப் போர்த்த வேண்டியிருந்தால், குழந்தை புரளத் தக்க வண்ணம், சிறிது தளர்த்தியாகவே போர்த்த வேண்டும் ; இறுக்கமாகப் போர்த்திவிடக் கூடாது.

சூரிய ஒளி குழந்தைக்கு மிகவும் நல்லது. குழந்தைக்கு ஒரு மாதமானதும் ஒளி குழந்தையின் கண்களில் படாமல், உடம்பின்மேல் படுமாறு அதைக் கிடத்தலாம். முதல் நாள் முதுகில் ஒரு நிமிஷப் பொழுதும், மார்பில் ஒரு நிமிஷப் பொழுதும், வெயில் படுமாறு செய்தால் போதுமானது. நாள்தோறும் சிறிதுநேரம் கூட்டி வரலாம். குழந்தை மழைகாலத்தில் பிறந்தால், சூரிய ஒளி கிடைக்கும் நாளில் அது படுமாறு செய்தல் வேண்டும். குழந்தை இவ்வாறு சூரிய ஒளியில் குளித்து வந்தால், எளிதில் சளிப்பும் வராது, தொற்று நோய்களும் வாரா.