பக்கம்:பாரதித் தமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

குறித்திருக்கிறார். அந்தக் காலத்திலே கட்டுரை முதலியவற்றிற்குத் தமிழிலே தலைப்புக் கொடுப்பதோடு, ஆங்கிலத்திலும் தலைப்புக் கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. பாரதியாருடைய கவிதைகள் சிலவே அவ்வாறு வெளியாயிருப்பதை இந்நூலில் குறித்திருக்கிறேன். பிற் காலத்திலே பாரதியாரின் எண்ணங்கள் முதிர்ந்தபோது ஆங்கிலத்தில் தலைப்புக் கொடுக்கும் பழக்கத்தைக் கண்டித்து எழுதியிருக்கிறார். இந்த மாறுதலை அவர் தமது பெயரை எழுதி வெளியிட்ட முறையிலுங்கூடக் காண முடிகிறது.

கவிதை, கதை, கட்டுரை எழுதிய காலத்தை அறிந்து அந்த முறையிலே அவற்றை வெளியிட வேண்டும் என்பதும், அதன் மூலம் அவருடைய நடை வளர்ச்சி, கருத்து வளர்ச்சி, கவிதை வளர்ச்சி முதலானவற்றையெல்லாம் ஆராய வேண்டும் என்பதும் என்னுடைய ஆசை. ஆங்கிலத்திலே பல கவிஞர்களைப் பற்றிய இத்தகைய நல்ல ஆராய்ச்சிகளை நான் படித்திருக்கிறேன். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஆரம்பகால நாடகங்கள் என்றும், இடைக்கால நாடகங்கள் என்றும், முதிர்ச்சிக்கால நாடகங்கள் என்றும் அவற்றைக் குறித்து அவற்றின் சிறப்பை ஆராய்ந்திருக்கிறார்கள். ஆரம்பகால நாடகங்களில் சொல்லதிகம், கருத்தும் கவிதையும் குறைவு என்றும், இடைக்காலத்து நாடகங்களில் அவை சமநிலை பெறுகின்றன என்றும், முதிர்ச்சிக்கால நாடகங்களிலே கவிதைப் பெருக்கும், கற்பனைத்திறமும், கருத்தாழமும் சொற்களை மீறிக்கொண்டு பொங்குகின்றனவென்றும் திறனுராயவாளர்கள் கண்டிருக்கிறார்கள். அவ்வாறு பாரதியாரை ஆராய வேண்டுமென்று கவிதைகளுக்கும், கட்டுரை கதைகளுக்கும் அவை வெளியான தேதிகளைக் குறித்து வைத்தேன்.

முன்பே நூல் வடிவில் வந்த பல கவிதை முதலியவற்றிற்கு அத்தொகுதிகளிலேயே தேதி குறித்திருந்தேன். அத்தொகுதிகள் எப்படியோ என் கையைவிட்டு நழுவிவிட்டன. நிச்சயமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக வாக்குறுதியளித்து மறந்துபோன அன்பர்களின் அஜாக்கிரதையால் அவை கிடைக்காமற் போய்விட்டன என்பதை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆளுல் நல்ல வேளையாக இந்நூலில் வெளியிட்டுள்ளவைகளுக்கும் இன்னும் பலவற்றிற்கும் அவை வெளியான தேதிக் குறிப்புகள் அவற்றை எழுதி வைத்துள்ள தாள்களிலேயே இருந்தன. அவற்றைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/11&oldid=1540058" இலிருந்து மீள்விக்கப்பட்டது