பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்


பெண்ணுருவத்தை இயக்கி ஆடுங்கால் ஆணுருவப்பகுதி உறுப்புகளும் அணிகளும் அசைவின்றி அமைதியுற்றிருக்கும். இத்திறன் மிக அரிதானது; கண்டு வியக்கத்தக்கது. இவ் வியக்கத்தக்க திறனைக் காட்டிமுடிப்பதன் மூலம் இளங்கோவடிகளும் வியக்கத்தக்கவராகிறார்.

கூத்தின் இயல்புகளை இவ்வாறு விளக்கும் போக்கிலேயே நாடக அமைவின் உறுப்புகளை இளங்கோவடிகள் ஆங்காங்கு புலப்படுத்தியுள்ளார்.

நாடக மேடை அமைப்பு, மேடை அழகு, திரைச் சீலைகள், ஒளி அமைப்பு, ஒப்பனை அறை, பாடலியற்றும் கவிஞன், பின்னணி இசை, இசைக் கருவிகள், நடிப்பு, அவைத்தலைவர், சுவைப்போர், பரிசு என நாடக அமைவின் உறுப்புக்கள் யாவற்றையும் செம்மையாகவும், வியக்க தக்க முறையிலும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

மாதவி தலை முதல் கால்வரை 29 வகை அணிகலன்களை அணிந்தமை விளக்கப்பட்டுள்ளது. வேட்டுவக் குமரி ஒருத்தியைக் கொற்றவைபோல் அணி செய்தமை விளக்கப்பட்டுள்ளது. இவை நாடக ஒப்பனைக் கலையின் அறிகுறிகளாக இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு நாடக அமைப்புக்கு உறுதுணையானவற்றை நிறைவாக அமைத்து இளங்கோவடிகள் நாடக உத்திகளையும் ஆங்காங்கு கையாண்டுள்ளார்.

கவுந்தியடிகள் என்னும் சமண சமயப் பெண் துறவியாரைப் படைத்ததும், யாழிசையால் கதைத் திருப்பத்தை

28