பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்


அடுத்து ஒரு காதற் காட்சி- எழுநிலை மாடமாளிகை அதில் நான்காவது மாடத்து நிலாமுற்றம். அங்கொரு மணிக்கால் கட்டில் கிடக்கிறது; கட்டிலில் கண்ணகி; பக்கத்தே கோவலன்; முதல் இரவு. தென்றல் பலவகை மனத்தோடு வீசுகிறது. கண்ணகி நாணத்தால் அடி பட்டிருக்கிறாள். தோளில் எழுதிய கரும்பு ஓவியம் கலைந்துள்ளது. மார்பில் எழுதிய தொய்யில் அழிந்துள்ளது. மல்லிகை மாலை குலைந்து தெரிகிறது. கோவலன் அணிந்திருந்த தாரும் குலைந்துள்ளது. இன்ப உலகில் தன்னை மறந்த நிலையில் கண்ணகி கிடக்குமிடந் தெரியாமல் கிடக்கிறாள். கோவலன் இன்பக் களிப்பில் உணர்வு கலங்கிக் கொஞ்சுகின்றான். கண்ணகியின் அழகைப் பாராட்டி இன்பக் தினவோடு பேசுகின்றான்; பெருமைப் பொலிவோடு புகழ்கின்றான். இந்தக் குலாவல் காட்சி நாகரிகமான காதல் காட்சி. படிப்போர் உள்ளத்தில் இக்காட்சி இன்பத் தினவை இலக்கிய உணர்வோடு கிள்ளி விடுகிறது. பாரதி காண்கிறார்: நெஞ்சம் துள்ளுகிறார்.

அடுத்து ஒரு கலைக் காட்சி; ஓர் ஆடல் அரங்கு. ஒருபுற எதிரே சோழமன்னன் தலைமையேற்றிருக்கிறான். பாங்கிலே அரசியல் கணத்தார் அமர்ந்திருக்கின்றனர். மறுபுற எதிரே கலைதெரி மக்கள் வெள்ளம், மேடையில் ஒப்பனைகளின் எழில் கொஞ்சுகிறது. ஓவியத் திரைச் சீலைகள் ஓடி ஒளிகின்றன. நட்டுவனும் பின்னணியினரும் தோன்றுகின்றனர். அழகின் தனித்தெய்வமாய் மாதவி மேடையில் தோன்றுகிறாள். உறுப்புகளையெல்லாம் கூத்தின் மலர்களாக்கி ஆடுகின்றாள். காண்போர் கண் கொட்டாது சுவைக்கின்றனர். மன்னன் மகிழ்ந்து ‘தலைக் கோல்’ ஈந்து, பட்டமளித்துப் பரிசை வழங்குகின்றான்.

30