பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80) பிற்காலச் சோழர் சரித்திரம் அன்பு பாராட்டிப் போற்றப் பெற்றவனும் பெரிய வீரனு மாகிய முதல் இராசராசசோழன் அரியணையைக் கைப் பற்றித் தானே ஆட்சிபுரியத் தொடங்குவானேயன்றி அதனை அவ்வுத்தமசோழன் பெற்று அரசாள உடன் பட்டுத் தான் ஒதுங்கிக்கொண்டிருக்க மாட்டான். இராச ராசசோழன் தன் சிறிய தந்தையாகிய உத்தம சோழ னுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் தான் அதனை மனத்தால் கூட விரும்புவதில்லை என்று தன் குடிகளிடம் கூறினான் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது. உத்தமசோழன் சூழ்ச்சியினால் தன் தமையன் கொல்லப்பட்டிருந்தால் இராசராசசோழன் அவன்பால் அத்துணை அன்பும் மதிப் பும் வைத்து அவ்வாறு கூறியிருக்கமாட்டான் என்பது ஒருதலை. உத்தமசோழன், இளவரசனாயிருந்தவனைக் கொல்லும்படி செய்து தான் பட்டம்பெற முயன்றிருந் தால் அவனுக்குக் குடிகள் ஆதரவும் அரசியல் அதி 'காரிகள் கூட்டுறவும் என்றும் கிடைத்திருக்க மாட்டா. அதனால், உள் நாட்டில் அமைதியின்மையும் கலகமுமே ஏற்பட்டிருக்கும். ஆனால், சோழ இராச்சியத்தில் எப் பகுதியிலும் குழப்பம் சிறிதுமின்றி உத்தமசோழன் ஆட்சி மிக அமைதியாக நடைபெற்றது என்பது பல கல் வெட்டுக்களால் அறியப்படுகிறது' - ஆகவே எக்காரணம் பற்றியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிகளும் அவர்கள் உடன் பிறந்தார் இருவரும் ஒருங்கு சேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று விட்டனர் என்பதும் இக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழனுக்குச் சிறிதும் தொடர்பில்லை என்பதும் நன்கு வெளி யாதல் காண்க. 1. S. I. I., Vol. III, No. 205. Verse 69. 2. Ibid, Nos. 128, 142, 143, 145 and 151. 3. கொன்றவர்களுள் பாண்டி நாட்டு அரசியல் அதிகாரியாகிய பஞ்சவன் பிரமாதி ராஜனும் ஒருவனாயிருத்தலால் பாண்டி நாட்டவ ராய பகைவர் தூண்டு தலே இக்கொலை நிகழ்ச்சிக்குக் காரணமாதல் கூடும்.