பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 புண்ணியம் ஆம் பாவம்போம்!

கொடுப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது; உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்வதில் ஒரு இன்பம் கிட்டுகிறது என்று கண்டு கொண்டது சிவ சிதம்பர உள்ளம்.

ஒருநாள், எதிர்வீட்டுக் குழந்தை அவர் வீட்டு வாசல்படியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தது. வெளியே போய் விட்டு வந்த சிவசிதம்பரம் நின்று, ‘என்ன விஷயம்? ஏன் அழறே? என்று கேட்டார்.

முன்பென்றால் எரிந்து விழுந்திருப்பார் போ மூதேவி, இங்கே ஏன் உட்கார்ந்திருக்கே?’ என்று கத்தியிருப்பார்.

ஏழு வயதுச் சிறுபெண். அழகு என்று சொல்ல முடியாது. அழுதுகொண்டே அது சொன்னது. அம்மா அடிச்சா. நோட்டு வாங்கணும். நோட்டு இல்லாமப் போனாடிச்சர் அடிப்பாங்க...” விம்மி விம்மி அழுததது. -

சிறுபிள்ளையாய் இருப்பது கவலையில்லாத, சந்தோஷமே மிகுந்த விஷயமில்லை; அந்தப் பிராயத்துக்கும் எத்தனையோ கவலைகள், பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. சிவசிதம்பரம் இப்படி எண்ணிக் கொண்டார்.

மெதுமெதுவாகப் பேச்சு கொடுத்து, சிறுமியின் தேவை யைப் புரிந்து கொண்டு, அதை அழைத்துப் போய் கடையில் ஒரு நோட்டு வாங்கிக் கொடுத்தார். மிட்டாயும் வாங்கித் தந்தார்.

சிறுமியின் அழுகை போன இடம் தெரியாது மறைந்தது. அதன்முகம் சந்தோஷத்தின் அழகுப் பூ ஆயிற்று. அதன் கண்களில் விசேஷ ஒளி சுடரிட்டது. * : *

‘இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் மாணவியாக இருந்தால், தேங்க்ஸ் தேங்க் யூ” என்று திரும்பத் திரும்பச் சொல்லி யிருப்பாள். இச்சிறுமி சாதாரணக் குழந்தை. நன்றி என வாய்விட்டுச் சொல்லும் நாகரிகம் கற்காத பிள்ளை.