பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i52 பூர்ணசந்திரோதயம் - 5 இங்கே இருக்கிற வரையிலாவது நீ அவைகளை அணிந்து கொண்டிருந்தால், அந்த நகைகளை நான் போட்டுக் கொண்டிருந்தால் என் மனம் எவ்வளவு அதிகமாக சந்தோஷம் அடையுமோ, அதைவிடப் பன்மடங்கு அதிகமான ஆனந்தத்தை நான் அடைவேன். நீ இங்கே வீட்டுக்குள்ளேயே இருக்கிறாய். இங்கே அன்னிய மனிதர் யாரும் வரமாட்டார்களென்பது உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆகையால், என்னுடைய ஆத்ம திருப்தியைக் கருதி நீ அந்த நகைகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். நீ அப்படிச் செய்தால்தான் என்னிடம் நீ உண்மையான பிரியமும் நன்றி விசுவாசமும் வைத்திருக்கிறாய் என்பது வெளிப்படையாகத் தெரியும்’ என்றாள்.

அதைக்கேட்ட ஷண்முகவடிவு அவளது வேண்டுகோளை மறுக்க மாட்டாதவளாய், அதற்கு இணங்கினாள். ஹேமாபாயி கபடநினைவோடு அவ்வாறு சூழ்ச்சி செய்கிறாள் என்று சிறிதும் சந்தேகியாத அந்த அணங்கு அவளால் கொடுக்கப்பட்ட வைர ஆபரணங்களை வாங்கி அணிந்துகொண்டாள். அந்த வடிவழகி தலைமுதல் கால்வரையில் அத்தகைய உயர்தர ஆபரணங்களை அணிந்து பனாரீஸ் பட்டாடைகளைத் தரித்து தத்ரூபம் அப்ஸர ஸ்திரீபோல மாறிப் போனதைக் கண்ட ஹேமாபாயி, ‘குழந்தாய்! இப்போது உன்னைப் பார்ப்பதற்கு ஒரு கண் போதாது. பதினாயிரம் கண்கள் வேண்டும். இப்படிப்பட்ட நிதிக்குவியலாகிய உன்னை எப்போதும் சாஸ்வதமாக அடைய எந்தப் புண்ணியவான் காத்திருக்கிறானோ அது ஈசுவரனுக்குத் தான் தெரியவேண்டும். உன் மனம் இன்னும் அந்தக் கலியான சுந்தரத்தினிடமே உறுதியாக இருக்கிறது. தெய்வம் அந்த மனிதனுக்கேநல்ல புத்தி கொடுத்து அவனைநல்ல மார்க்கத்தில் திருப்பி வெகு சீக்கிரம் அவனை உன்னிடம் கொணர்ந்து சேர்க்கும்; நீ கவலைப்படாதே” என்று கூறினாள். ஒருநாள் முழுதும் ஷண்முகவடிவு அந்த ஆபரணங்களை அணிந்திருந்து இரவில் கழற்றிவைக்கத் தொடங்கினாள். ஹேமாபாயி