பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பூர்ணசந்திரோதயம் - 5 தீர்மானித்துக் கொண்டான். லலிதகுமாரிக்கு இடர் செய்யமனங் கொள்ளாமல், ஒரு கூத்தாடிப் பெண் தனது வீட்டையும் தாயையும் உடன் பிறந்தோரையும் விலக்கி வந்திருக்கத் தான் அந்தச்சந்தர்ப்பத்தில் கமலத்தைக்கருதி லலிதகுமாரிதேவியைக் காப்பாற்றாமல் பின்வாங்க நினைப்பது கேவலம் அதமச் செய்கை என்று நினைத்துத்தான் இருவரையும் காப்பாற்ற முயல வேண்டுமென்றும் முடிவில் ஒருகால் அதனால் கமலத்திற்கு ஏதேனும் துன்பம் நேருமானாலும், அதைக் கருதித் தான் பின் வாங்கக் கூடாதென்றும், அவன் உறுதிசெய்து கொண்டவனாய், அதன்பிறகு கமலத்தைப் பார்க்காமலும், அவளை அதற்கு முன் அறியாதவன் போலவும் இளவரசரைப் பார்த்தபடி பேசத் தொடங்கினான். இத்தனை எண்ணங்களும் மின்னல் தோன்றி மறையும் நேரத்தில், கலியாணசுந்தரத்தின் மனத்தில் தோன்றி மறைந்தன. ஆதலால், அவனது நிலைமையில் திடீரென்று ஏற்பட்ட மாறுபாட்டை இளவரசராவது, மற்ற ஜனங்களாவது சிறிதும் கவனியாதிருந்தனர். ஆனால், பூர்ணசந்திரோதயத்தின் நிலைமையோ சொல்லில் அடங்காத பரம சங்கட நிலைமையாக இருந்தது. அடுத்த rணத்தில் தன்னைப் பற்றிய எல்லா ரகசியங்களையும் கலியாணசுந்தரம் வெளியிட்டு விடுவான் என்றும், தான் ஒரு நொடியில் தனது மகோன்னத பதவியை இழந்து பாதாளத்தில் வீழ்ந்துமானபங்கமும் கொடிய தண்டனையும் அடைய நேருமே என்றும் நினைத்து அவள் பெருந்திகிலும் குலைநடுக்கமும் அடைந்து குன்றிப் போய் நெருப்பின் மேல் இருப்பவள் போலத் தத்தளித்திருந்தாள். அவளது உயிர் அநேகமாய்ப் போய் விட்டதென்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இன்னம் எத்தனை விநாடிநேரம் தான் அந்தச் சிம்மாசனத்திலிருக்க நேருமோ என்றும், எந்த நொடியில் தான் கீழே இறங்கவும் அவமானமடையவும் நேருமோ என்றும் நினைத்து அந்த மடந்தை ஆவலே வடிவாக மாறி நரகவேதனை அடைந்தவளாய் அப்படியே பிரமித்து உட்கார்ந்திருந்தாள். அவள் எதிரிலிருப்போரைப் பார்ப்பவள் போல நடித்தாள்.