பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வாழ்த்துரை

இனிய அன்பர் ஹாஜி மணவை முஸ்தபா அவர்கள் எழுதிய “பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்” என்ற இனிய நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இனிய தமிழ், ஆற்றொழுக்கான நடை, திருமறையின் பிழிவு ஆகியன நூலுக்கு அணி செய்யும் சிறப்புகள். இந்நூலைப் படித்து முடிப்பதற்குரிய ஈர்ப்பாற்றலை நூலாசிரியர் தந்துள்ளார்.

உலகம் விரிந்தது; பரந்தது. இன்று அறிவியல் பூத பெளதீகம் உலகை இணைத்துவிட்டது. ஆயினும், மனித இதயங்கள் இணைக்கப் பெறவில்லை. இந்தக் குறையைத் திருமறை நீக்கும் என்ற நம்பிக்கையை இந்நூலாசிரியர் தருகின்றார். பெருமானார் (சல்) அவர்கள் பிற சமயங்களிடம் சகிப்புத் தன்மையைக் காட்டினார். இல்லை, எல்லாச் சமயங்களையும் மதித்துப் பாராட்டினார் என்ற திருமறை வாக்கின் வழி உணர்த்தும் பொழுது நமக்கு இன்பம் மேலிடுகிறது. “அல்லாஹ்வை விடுத்து அவர்கள் எவற்றை வணங்குகின்றார்களோ அவற்றைப் பற்றி நீங்கள் தீங்கு பேசாதீர்கள்” (குர்ஆன் 6 : 108) என்று திருமறை கூறுகிறது என்பது ஊண், உயிர், உணர்வு இனிக்கம் செய்தி. மேலும் “உங்களுக்கு உங்கள் மார்க்கம் : அவர்களுக்கு அவர்கள் மார்க்கம்” என்ற திருமறையின் வாக்கு, சமய இணக்கத்திற்குரிய பொன்மொழி.

நமது போற்றுதலுக்குரிய பெருமானார் (சல்) அவர்கள் மதினாவில் வாழ்ந்த பல்வேறு சமயத்தினிடையே இணக்கம் ஏற்படுத்த முயன்றார். உலக வரலாற்றில் முதல் சர்வ சமயக் கூட்டத்தைக் கூட்டி மனித குல வரலாற்றில் ஒரு திருப்பு மையத்தை உருவாக்கிய