பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

179

தனியுடைமையானது சமுதாயத்தின் பொதுவுடைமை எனும் உயர்நிலை அடைகிறது.

ஜகாத் கடமையை செவ்வனே நிறைவேற்றும் முஸ்லிம் தான் வாழும் சமுதாயத்துக்காகத் தங்கள் சொந்த நலனை, பொருளைத் தியாகம் செய்யும் மன உணர்வை அழுத்தமாகப் பெறுகிறான். இத் தியாக உணர்வு சமுதாயச் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறது. செல்வர்களிடம் குவியும் சொத்து ஜகாத் மூலம் குறைக்கப்படுவதால் பொருட் குவிப்பும் தடுக்கப்படுகிறது.

ஜகாத் முறையின் மூலம் செல்வந்தருக்கும் ஏழைக்குமிடையேயுள்ள இடைவெளி நீக்கப்படுகிறது. இரு சாராரும் இணைந்து நின்று நலம் பெறும் நந்நிலை உருவாகிறது. இதன் மூலம் மனிதத் தன்மை மாண்புறுகிறது.

இனி, ஏழை வரி அல்லது ஏழையின் பங்காகிய ஜகாத் எத்தகைய அடிப்படையில் கணக்கிடப்பட்டு, வழங்கப்படு கிறது என்பதை பார்ப்போம்.

ஜகாத்துக்கு உரியவைகளும்
பங்கீட்டு முறைகளும்

முதலாவது ஜகாத்துக்குரிய சொத்து அல்லது வருமானத்தின் கால அளவு ஓராண்டு ஆகியிருக்க வேண்டும். ஒராண்டுக்குக் குறைந்த சொத்திலிருந்து ஜகாத் தொகை பிரித்தெடுக்கப்படுவதில்லை.

ஒரு முஸ்லிம் தனது ஆண்டு வருமானத்தில் தன் செலவு போக மீந்துள்ள தொகையின் அளவைக் கணக்கிட்டு ஜகாத் வழங்க வேண்டும். அவ்வாறு, மீந்துள்ள தொகையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் குறைவாக இருப்பின் அவர்கட்கு ஜகாத் கடமையாவதில்லை. அதாவது 90 கிராம் தங்கம் அல்லது 620 கிராம் வெள்ளி அல்லது இவை