பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

கலீபாக்களின் ஆட்சிப் பகுதியில் இருந்தது. அம்மடாலயம் அமைதியாகச் செயல்பட முஸ்லிம்கள் வழி செய்தனர். இதற்குப் பதில் செய்யுமாப்போல், அதில் வாழ்ந்த துறவிகள் மடாலயத்தின் வளாகத்திலேயே ஒரு பள்ளி வாசல் கட்டிக் கொள்ள முஸ்லிம்களை அனுமதித்தனர்.”

“அது சரி! இது நடந்து 1,300 ஆண்டுகள் ஆகிவிட்டன! இது போன்ற நிகழ்ச்சிகளை இன்னும் கூறிக் கொண்டிருந்து பயன் ஏது? என்று சிலர் வினவலாம்.

திருக்குர்ஆன் போதிக்கும் இப்பரந்த நோக்கும் சகிப்புத் தன்மையும் என்றும் நிலைத்து நிற்பவை என்பதைப் புலப்படுத்துவதற்கு ஓர் அண்மைக் காலச் சான்றையும் எடுத்துக் கூறுவோம்.

இரண்டாம் உலகப்போர், மனிதகுலத்துக்குப் பயங்கரமான பேரிழப்புகளை வாரி வழங்கிவிட்டு நின்றதும் இனிப்போர் நடவாமல் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டு, அதற்கு ஒரு சாசனம் வரையப்பெற்றது. அதற்குக் காரணமாக விருந்த பேராசிரியர் ரபேல் லார்கின் கூறுகிறார் :

“அனைத்துலகக் கண்ணோட்டத்துடன் மிகுந்த சகிப்புத் தன்மையைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் சமயத்தின், குர்ஆனுக்கு இசைவாக இச்சாசனம் அமைந்துள்ளது என்பதை முஸ்லிம்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொள்கிறேன்.” (ஐ.நா. சாசனத்தை உருவாக்கிய பேராசிரியர் ரபேல் லார்கின்)

இதற்கு இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வரலாற்று ஏடுகளிலிருந்து ஏராளமான சான்றுகளை எடுத்துக்கூற முடியும் - விரிவஞ்சி விடுக்கின்றோம்.

அப்படியானால் இஸ்லாத்தைப் பற்றி ஏன் தவறான கருத்துகள் நிலவுகின்றன? என்னும் ஒரு கேள்வி எழலாம்.