பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

பாதிப்புக் குள்ளாகும் மக்கள் பசித் துன்பத்தினின்றும் மீள, வாரிவழங்கும் ஈகையுணர்வு பூரித்தெழுகிறது. அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ள விழைகிறது. எனவேதான் முஸ்லிம்கள் ரமளான் நோன்பு நாட்களில் ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கி மகிழ்கிறார்கள். நோன்புப் பெரு நாளையே ‘ஈகைத் திருநாளாக’க் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

நோயழிக்கும் நோன்பு

மருத்துவவியல் அடிப்படையிலும் நோன்பு மிகச் சிறப்பான இயற்கை மருத்துவ முறையாக அமைந்துள்ளது. உடலில் கொழுப்பு மிகுந்திருந்தால், நீரிழிவு நோய், இதய நோய்கள், இரத்த அழுத்தம், மூத்திரக்காய் வீங்கியிருத்தல், நாள்பட்ட கீழ்வாத நோய் போன்றவைகளை இஸ்லாமிய நோன்பு முறையால் குணமாக்க இயலும் என அண்மைக் கால மருத்துவ ஆய்வுகள் எண்பித்துள்ளன.

நாள்தோறும் கொழுப்புச் சத்துமிக்க புலால் உணவுகளையும் சுவையான இதர உணவு வகைகளையும் மிகுதியாக உண்பதால் உடலில் கொழுப்புச் சத்து சேர உடல் பரமனாகிறது. இவ்வாறு தடித்த உடலைக் கொண்டோர் எளிதாக இதய நோய், நீரிழிவு நோய் போன்றவைகளுக்கு இலக்காகின்றனர். இதனால் மாரடைப்பு போன்ற கொடிய நோய்கள் எளிதாகத் தலை தூக்க ஏதுவாகின்றன. எனவே, தேவைக்கதிகமாக உடலில் சேர்ந்துள்ள கொழுப்புப் பொருளைக் கரைக்கவும், உடல் பருமனைக் குறைக்கவும் இதன் மூலம் பற்பல நோய்த் தொல்லைகளிலிருந்து விடுபடவும் ‘நோன்பு’ முறை எளிய இயற்கையான வழி முறையாக அமைந்துள்ளது.

ரமளான் மாதம் முழுமையும் நோன்பு இருப்பதால் உடல் எடை வெகுவாகக் குறைய நேர்கின்றது. இதனால்,