பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

யருக்கென ஒரு புதிய ஆண்டை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசர, அவசியத் தேவை ஏற்பட்டது.

இரண்டாவது கலீஃபாவாக இருந்த உமர் (ரலி) அவர்கள் ஒரு சமயம் முக்கியக் குறிப்பு ஒன்றைத் தயாரித்து அதில் ‘ஷஃபான்’ மாதம் என்று குறித்தார்கள். ஆனால், உமர் (ரலி) அவர்கட்கு உடனே ஒரு ஐயப்பாடும் எழுந்தது. நடைமுறையில் இருந்துவரும் மூன்று வகையான ஆண்டுகளில் எந்த ஆண்டின் ‘ஷஃபான்’ மாதம் என வருங்காலத்தில் இக்குறிப்பைக் காண்பவர்கள் விளங்கிக் கொள்ள முடியும் எனும் ஐயம் அழுத்தமாக அவர் உள்ளத்தில் எழுந்தது. எனவே, முஸ்லிம்கள் கடைப்பிடிக்கத்தக்க புதிய இஸ்லாமிய ஆண்டை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றிச் சிந்திக்கலானார். அதை வலியுறுத்தும் வகையில் மற்றுமொரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. கலீஃபா உமர் (ரலி) அவர்கள் அடிக்கடி பல்வேறு மாநில ஆளுநர்களுக்குக் கடிதம் எழுத வேண்டியிருந்தது. அக்கடிதங்களில் தேதி ஏதும் குறிப்பிடாததால் ஆளுநர்கட்குக் குழப்ப மேற்பட்டது. இக்குறையை கலீஃபா உமர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களுக்கென புதிய இஸ்லாமிய ஆண்டை உருவாக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்தார்.

இதைப்பற்றித் தன் தோழர்களிடம் ஆலோசனை கேட்டார். சிலர் பாரசீக ஆண்டைப் பின்பற்றி அமைக்கலாம் என்றனர். வேறு சிலர் பெருமானார் நபிகள் நாயகம் (சல்) பிறந்த நாளையே இஸ்லாமிய ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளலாம் என்றனர். அவ்வாலோசனையில் கலந்து கொண்ட பெருமானாரின் மருகர் அலி (ரலி) அவர்கள் அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மக்காவினின்றும் மதினா சென்ற நாளிலிருந்து புதிய இஸ்லாமிய ஆண்டைத் துவங்கலாம் எனக் கூறினார். இந்த ஆலோசனை எல்லோருக்கும் ஏற்புடைத்ததாக இருந்ததால்