பக்கம்:பொன் விலங்கு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

பொன் விலங்கு

அவனுக்குத் தோன்றவில்லை. இப்போது அது ஆர்டர் இல்லை என்பதும் நிச்சயமாகிவிட்டது. 'ஆச்சரியம்' என்ற வார்த்தையோடுதான் அந்தக் கடிதமும் ஆரம்பமாகி இருந்தது. எழுத்துக்கள் குண்டு குண்டாக வரி பிறழாமல் தேர்ந்து பழகின கை பூத்தொடுத்த மாதிரி இருந்தன.

".....உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் துணிந்து எழுதுவதே ஆச்சரியமாயிருக்கலாம். இதை எப்படித் தொடங்குவதென்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே எப்படி முடிப்பதென்றும், எந்த இடத்தில் முடிப்பதென்றும் கூடத் தெரியாமல் போகலாம். உங்களை எப்படி அழைத்து இந்தக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று சிந்தித்துத் தயங்குவதிலேயே அதிக நேரம் வீணாகக் கழிந்துவிட்டது. அன்பின் பரிபூரணமான தன்மை கனிந்து நிற்கிறாற்போல் ஓர் அழகிய அழைப்பைத் தேடினேன். அப்படிப் பல அழைப்புகள் அடுக்கடுக்காகத் தோன்றின. எந்தச் சொல் அதிக அழகாயிருக்கும், எதை எழுதினால் உங்கள் மனம் கவரப்படும் என்றெல்லாம் நினைத்து நினைத்துத் தயங்கிய பின் எதையும் எழுதாமல் அழைக்கப் படவேண்டிய அந்த இடத்தைப் புள்ளிகளால் மட்டும் நிரப்பினேன். பிரியமுள்ள மனிதரை மனப்பூர்வமாகக் கூவி அழைப்பதில் மிகவும் ஆற்றல் வாய்ந்த பதச் சேர்க்கை எதுவோ அது அந்த இடத்தில் உங்களுக்குத் தோன்றட்டும். செய்யலாமா, கூடாதா என்று தயங்கிவிட்டு முடிவில் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் இதை எழுதுகிறேன். இதை எழுத எண்ணிய போதும், எழுதிக்கொண்டு இருக்கும்போதும், நான் அடைந்து கொண்டிருக்கிற உற்சாகத்தை இதற்கு முன்பு எப்போதும் அடைந்ததில்லை. வாழ்க்கையில் இப்படி முன்பின் சொல்லிக் கொள்ளாமல் வருகிற மகிழச்சியை என்னென்பது? இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதத் துணிந்ததைப் பற்றியோ, எழுதியதைப் பற்றியோ நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று எண்ணும்போது எனக்குப் பயமாகவும் தயக்கமாகவும் தான் இருக்கிறது. ஆனாலும் இதை நான் உங்களுக்கு எழுதித்தான் ஆகவேண்டும். நீங்கள் ஒரு பாடல்...அப்பாவிடம் இண்டர்வியூவின்போது சொல்லிக் கொண்டிருந்தீர்களே...அந்தப் பாடல்தான் எனக்கு இப்போது,என் மனநிலையை உங்களிடம் சொல்வதற்குத் துணையாயிருந்தது. நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/104&oldid=1356017" இலிருந்து மீள்விக்கப்பட்டது