பக்கம்:பொன் விலங்கு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

123

அவன் ஆத்திரப்படநேர்ந்ததால், இரயில் பிளாட்பாரத்தில் அவனிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

அப்புறம் அவர் இரயிலிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த மோகினியை அவள் தாயோடு சந்தித்ததும், அவளிடம் கூந்தல் தைல விளம்பரத்தை ஞாபகப்படுத்தியதும், தன் காரிலேயே அவர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டதும் மிகவும் வேகமாக நிகழ்ந்தேறிய நிகழ்ச்சிகள். புறப்படுவதற்குமுன், “இரயிலில் எங்களோடு இதே வண்டியில் வந்தவர் பேனாவைத் தவறவிட்டுப் போயிருக்கிறார். அதை அவரிடம் கொடுத்துவிட வேண்டும். அவர் பிளாட்பாரத்திலேயே எங்காவது இருக்கிறாரா என்று பார்க்கிறேன்” - என்று மோகினி பிளாட்டாரத்தின்மறுகோடிக்குப் போக முந்திய போது, “யார்? அந்தப் பயல் சத்தியமூர்த்தியைக் கேட்கிறாயா? அவனை நானும் வழியில் எதிரே பார்த்தேன். அவன் இதற்குள் போயிருப்பானே? பையன் அவசரக் குடுக்கை. உங்கள் வண்டியில் அவனும் கூடவந்ததை நானே பார்த்தேன்.எங்கள் தெருவில் இருக்கிற பையன்தான். உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இந்தப் பேனாவை நானே அவனிடம் கொடுத்து விடுகிறேன் மோகினி. நீ எதற்கு வீணாகச் சிரமப்படவேண்டும்?” என்று அவளைத் தடுத்தார் கண்ணாயிரம். தன்னிடம் அவர் பதில் சொல்லிய விதமே மோகினிக்குப் பிடிக்கவில்லை. ஆள் இல்லாதபோது மற்றவர்களைப் பற்றிப் பயல், பரட்டை என்றெல்லாம் பேசுவது கண்ணாயிரத்துக்கு வழக்கம். அப்படிப் பேசிப் பேசியே பெரிய மனிதரானவர் அவர்.

“நானே நேரில் சந்தித்து இந்தப் பேனாவை அவரிடம் கொடுக்க வேண்டும்” என்று மோகினி உறுதியாகக் கூறியபோது, அவளுடைய தாய் அவளை உறுத்துப் பார்த்தாள்.

“பைத்தியம் பிடித்துப்போய் அலையாதே...”என்று கடுமையான குரலில் மிரட்டினாள். காரியவாதியான கண்ணாயிரம் இந்த நிலையில் தமக்குச் சாதகமாக எல்லாம் முடிவதற்கு அப்போது தாம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டார். தாய்க்கும் மகளுக்கும் சண்டை வந்து ஒருவருக் கொருவர் முகத்தைத் தூக்கிக் கொண்டு நின்றால், “மயில் தோகைமார்க்கூந்தல் தைலத்துக்காக.எடுக்க வேண்டிய புகைப்படம் பாழாகி விடுமோ என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/125&oldid=1356535" இலிருந்து மீள்விக்கப்பட்டது