பக்கம்:பொன் விலங்கு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

121

தனக்கு மட்டுமல்ல; தனக்கும் தான் கையைச் சுட்டிக் காண்பிக்கிறவர்களுக்கும் அவர்களுடைய கீழ்த்தரமான விருப்பங்களுக்கும், எல்லாமாகச் சேர்ந்து ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் அடிமையாக இருக்க வேண்டுமென்று அம்மா ஆசைப்படுகிறாள். கைகளிலும் கால்களிலும் கனமான இரும்பு விலங்குகளைப் பூட்டிக் கொண்டு முரட்டு அடிமையாக இருப்பதையும்விடக் கேவலமானது இப்படிப் பூவும், பொன்னும், பட்டும், பணமும் பகட்டுமாக அலங்கரித்துக்கொண்டு யார் யாருடைய விருப்பங்களுக்கோ, எப்படி எப்படியோ மிகவும் மென்மையான அடிமையாக இருப்பதுதான். இதை எப்படி நான் என் அம்மாவுக்குப் புரியவைப்பேன்? அவளுக்குப் புரிய வைப்பதைவிடப் பட்டப்பகலில் எல்லோரும் காணும்படி மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்தில் ஏறிக் கீழே குதித்து என் உயிரை மாய்த்துக் கொள்வது என்னால் சுலபமாக முடிகிற காரியம். என்னுடைய இந்த அழகே எனக்குப் பெரிய பகை! நான் ஏன் இப்படி அழகாகப் பிறந்து தொலைந்தேன்? பார்த்தவர்கள் அருவருப்பு அடையும்படியான அவலட்சணமாகப் பிறந்திருந்தோமானால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்? அப்போது நான் யார் கண்ணிலும் படமாட்டேன். என்னைப் பார்க்கிறவர்கள் மனமும் கலங்கித் தவிக்காது. ‘பார்க்கிற கண்ணில் இலட்சணமாகத் தெரிய வேணுமடி, பெண்ணே’ என்று கூச்சமில்லாமல் உபதேசம் செய்கிறாள் அம்மா. அழகை முதலாக வைத்தும் ஒரு வியாபாரமா? சீ! சீ! என்ன வாழ்க்கையோ! என்ன பிழைப்போ? போன மார்கழியிலே டான்ஸுக்காக மனப்பாடம் பண்ணின ஆண்டாள் பாசுரத்திலே, ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்’ என்று ஒரு வரி வந்ததே, -அந்த வரியை நெட்டுருப் போடுகிற ஒவ்வொரு தடவையும் எனக்கு அழுகையே வந்திருக்கு. அம்மாவோ ‘மானிடருக்காகவே பேச்சுப்பட்டு, ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவருக்குப் பேச்சுப்பட்டு வாழ வேண்டும்’ என்கிறாள்.

இப்படி மனத்தை அரித்தெடுக்கும் பல நினைவுகளோடு கண்ணாயிரத்தின் காரில் போய்க் கொண்டிருந்தாள் மோகினி.

போன மார்கழியில் இந்த ஆண்டாள் பாசுரத்துக்குத்தானே ஆண்டாள் வேடமிட்டுக்கொண்டு பக்தி சிரத்தையோடு அபிநயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/127&oldid=1356598" இலிருந்து மீள்விக்கப்பட்டது