பக்கம்:பொன் விலங்கு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 145

என்ற திருக்குறளை அவர் பாடியிருக்க முடியாது. கண்ணா யிரத்தைப் போன்றவர்களின் வாழ்க்கையை இரசித்து மகிழ்வதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டதாகக் குமரப்பன் சொல்கிறான். சற்றுமுன் தெருத் திருப்பத்தில் விடைபெற்றுக் கொண்டு செல்லும்போதுகூடக் குமரப்பன் இதே வார்த்தை களைத்தான் சொல்லிவிட்டுப் போகிறான். என்னால் கண்ணாயிரத்தைப்போல் தீயசக்திகளை இரசிக்க முடிவதில்லை. இந்த விதமான தீய சக்திகள் என் இதயத்தையும் எண்ணங்களையும் குமுறச் செய்து விடுகின்றன. தீமைகளையும், பொய்களையும் எதிரே காணும்போது கைகள் துடித்து மனம்கொதிக்கிறேன் நான். இப்படி உணர்ச்சி வசப்படுவது குமரப்பனுக்குப் பிடிக்கவில்லை.

ஆனால் இன்றையச் சமூக வாழ்வுக்குச் சிறுமை கண்டு பொங்குகிற இந்த நியாய மனப்பான்மை அவசியம் வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எத்தனையோ நல்ல குணங்களை உடையவராகிய பூபதி அவர்கள், இளமை அதை உடையவனுக்கு ஒரு தகுதிக் குறைவு' என்று பொருள் படுகிறாற்போல் கூறியதைக்கூட என்னால் பொறுத்துக்கொண்டு பதில் பேசாமல் சும்மா இருக்க முடியவில்லை. வயிற்றைக் கழுவி வாழவும், பிழைக்கவும் வேண்டுமானால் குமுறவும் கொதிக்கவும் வேண்டிய பல இடங்களிலும்கூட உணர்ச்சியே இல்லாமல் மரத்துப்போய் இருந்துவிட வேண்டியதுதான் போலும், பலர் அப்படித்தான் வாழ்கிறார்கள். துடிப்புடனும். கொதிப்புடனும் வாழ்கிற சிலரும்கூட நாளடைவில் மெல்ல மெல்ல மரத்துப்போய் விடுகிறார்களே என்று எண்ணிய போது வாழ்க்கையே பெரிய ஏமாற்றமாகத் தோன்றியது அவனுக்கு. இவ்வாறு கலக்கமும் குழப்பமும் நிறைந்த மனத்தோடு மேலமாசி வீதியும் வடக்குமாசி வீதியும் சந்திக்கிற திருப்பத்தில் அவன் சென்று கொண்டிருந்தபோது கலவரமும் கூப்பாடுமாக அங்கே கூடியிருந்த ஒரு கூட்டத்தினால் கவரப்பட்டான். கீழே மரத்தடியைத் தேடிவந்து கோயில் கொண்டுவிட்ட ஒரு பிள்ளையாருக்கும் அந்த இடத்தில் நிறுத்தப்படுகிற பல ஜட்கா வண்டிகளுக்கும் ஆதரவாக அங்கே பெரிய ஆலமரம் ஒன்று உண்டு. மனிதர்கள் நெருங்கி வாழ்கிற பெரிய நகரங்களில் திடீர் என்று ஓரிடத்தில் கூட்டம் கூடுவதும் கலைவதும் சர்வ சாதாரணம். ஆனால் அன்று அங்கே அந்த முன்னிரவில் சத்தியமூர்த்தி சந்தித்த கூட்டம் அப்படிக் கூடிய கூட்டமில்லை.

பொ. வி . 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/147&oldid=595095" இலிருந்து மீள்விக்கப்பட்டது