பக்கம்:பொன் விலங்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

13

சம்பந்தமின்றிப் போய்க்கொண்டிருந்த அவனது சிந்தனை ஒரு கணம் தடைப்பட்டு நின்றது. பின்பு மேலே வளர்ந்து தொடர்ந்தது.

இரயில் நிலையத்தில் பிரயாணிகள் தங்கியிருக்கும் அறைக்கு 'வெயிட்டிங் ரூம்' என்று பெயர் வைத்தவர்கள் எத்தனைப் பொருத்தமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். வெயிட்டிங் ரூமில் காத்துக் கொண்டிருக்கும் போதும் அப்படிக் காத்திருப்பவர்கள் இரயிலுக்காக மட்டும் காத்திருக்கவில்லை. சுகமும், துக்கமும், இலாபமும், நஷ்டமும், திருப்தியும், அதிருப்தியும் கலந்த பல்லாயிரம் காரியங்களை நோக்கிப் புறப்பட்டுச் செல்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசைகளும் நிறைவேற வேண்டியவைகளும் வரிசை வரிசையாகக் காத்துக் கொண்டிருப்பதால் மனிதனுடைய மனம்தான் மிகப் பெரிய வெயிட்டிங் ரூம் என்று பாதி வேடிக்கையாகவும் பாதி துயரமாகவும் நினைத்தான் சத்தியமூர்த்தி. அந்த வேளையில் அப்படிச் சிந்திப்பதில் ஒரு சுகம் இருந்தது.

மிகப் பல சமயங்களில் மனிதனுடைய மனம்தான் உடம்பைக் காட்டிலும் அதிகப் பரபரப்போடு காத்துக் கொண்டிருக்கிறது. இரயில் நிலையத்து "வெயிட்டிங் ரூமி'லும் அப்படித்தான். முகத்தில் புன்னகை மலர அந்த வெயிட்டிங் ரூமில் தன்னைச் சுற்றிலும் இருந்தவர்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு கண்பார்வையைச் சுழலவிட்டான் சத்தியமூர்த்தி. அவனைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் மனத்திலும் ஏதாவதொரு காரியம் காத்திருக்க வேண்டும். ஆனால் அது மற்றவருக்குத் தெரியவும் தெரியாது. புரியவும் புரியாது. ஏனென்றால் அந்த மற்றவர் மனத்திலும் எந்தக் காரியமோ காத்துக் கொண்டிருக்கிறது.

'அதோ அந்தக் கிழவர் மூலையில் சுருண்டு படுத்திருக்கிறாரே, அவருடைய தலைமாட்டில் இருக்கும் சிறு துணிப்பையையும், நெஞ்சுக்கும் சட்டைப்பையிலிருக்கும் பணத்துக்கும் பாதுகாப்பாகத் தூக்கத்திலும் அந்த இடத்தைத் தழுவியிருக்கும் அவர் கையையும் பார்த்தால், ஆறாவது பெண்ணுக்கோ, ஏழாவது பெண்ணுக்கோ வரன் தேடிப் புறப்படுகிற அப்பாவித் தந்தையாகத் தோன்றுகிறது. இதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/15&oldid=1405623" இலிருந்து மீள்விக்கப்பட்டது