பக்கம்:பொன் விலங்கு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பொன் விலங்கு

சந்நிதி முகப்பில் நடந்தபோது கோயிலுக்குள் போவதற்காகக் கண்ணாயிரம் காரில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார். நெற்றி நிறையத் திருநீறு துலங்க மார்பில் சட்டையோ, பனியனோ இல்லாமல் பளபளவென்று மின்னும் ஒரு பட்டு அங்கவஸ்திரத்தை இழுத்துப் போர்த்திக்கொண்டு பரம பக்தராகக் கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தார் கண்ணாயிரம்,

"பார்த்தாய் அல்லவா?' என்று சிரித்துக் கொண்டே குமரப்பனைக் கேட்டான் சத்தியமூர்த்தி,

"ஆகா! பார்க்காமல் விடுவேனா? தாராளமாகப் பார்த்தேன். நாயன்மார்களும். ஆழ்வார்களும் பக்திக்குக் கவசமாயிருந்து அந்த நல்லுணர்வைக் காத்தார்கள். இந்தக் காலத்திலோ ஒழுக்கமும் நேர்மையுமின்றி வாழும் சிலருக்குக்கூடத் தங்களைக் காத்துக் கொள்ளும் ஒரு கவசமாக பக்தி பயன்படுகிறது. அவர்கள் பக்திக்கு கவசமாக இருந்து அதைக் காத்தார்கள் என்றால் இவர்கள் பக்தியை ஒரு கவசமாக அணிந்து தங்களைக் காத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்."

"சரியாகச் சொல்லிவிட்டாய், குமரப்பன்! நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் எல்லோரிடமும் கடுமையாகவும் முறையின்றியும் நடந்துகொண்டே தெய்வத்தினிடம் மட்டும் எளிமையாகவும், பணிவாகவும் நடந்து கொள்வதாகப் பாவிக்கிறவர்களைத் தெய்வம் எப்படி மன்னிக்க முடியும்?"

“மன்னிப்பதால் பெருமைப்படலாம். ஆனால் மாற்றி யமைப்பதால் மட்டுமே திருப்திப்பட முடியும். கண்ணாயிரத்தைப் போல் பொய்யாக வாழ்கிறவர்களும் பக்திக் கோலம் பூண்டு பரமபக்தராகக் கோவிலுக்கு வருகிறார்கள். இதயபூர்வமான பக்தியைத் தவிர வேறு எந்தக் காணிக்கையையும் சுமந்து கொண்டு வர முடியாத பல்லாயிரம் ஏழைகளும் கோவிலுக்கு வருகிறார்கள். கோவிலுக்கு வருவதைக் காரணமாக வைத்தும் சமூகத்தில் நல்லவர் கெட்டவர்களைப் பிரித்துக் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது பார்த்தாயா? இந்த நூற்றாண்டின் சமூக வாழ்க்கையில் யார் பெரிய ஆராய்ச்சியாளன் தெரியுமா? நல்லவர் - கெட்டவர் பிரித்துக் கண்டுபிடிக்கத் தெரிந்தவன் தான் பெரிய ஆராய்ச்சியாளன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படிப் பிரித்துக் கண்டுபிடிக்கத் தெரிந்தவர்கள் நம்மிடையே மிகவும் குறைவாயிருக்கிறார்களடா சத்தியம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/204&oldid=595223" இலிருந்து மீள்விக்கப்பட்டது