பக்கம்:பொன் விலங்கு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பொன் விலங்கு

அந்தப் பதிலைக் கூறிவிட்டுத்தனக்குள் சிந்திக்கத் தொடங்கிய சத்தியமூர்த்தி, இனி ஒவ்வொரு நாளும் இந்தத் திமிங்கலத்தோடு நாம் போராடி வெல்ல வேண்டியிருக்கும் என்ற எதிர்கால நிகழ்ச்சியை இன்றே நினைவு கூர்ந்தான்.

17

※ மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும் எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன்கூட்டியே தெரியாம லிருப்பதுதான்.

>}:

அந்த அதிகாலை நேரத்தில் மல்லிகைப் பந்தலின் வீதிகளில் நடந்து செல்வதே உற்சாகமாக இருந்தது. ஏறி இறங்கி மேடும் பள்ளமுமாக உயர்ந்தும் தாழ்ந்தும் செல்லும் சாலைகளின் இருபுறமும் ஒரே வரிசையாக நேர்கோடு பிடித்து நிறுத்தினாற்போல் நிற்கும் மரங்களும், குளிர்ந்த காற்றும் 'இந்த வீதியில் நாம் மகிழ்ச்சியோடும், பெருமிதத்தோடும் தாராளமாகக் கால்களை வீசி நடக்கலாம்' என்று நடக்கிறவனையே கர்வப்படச் செய்கிற வீதிகளாயிருந்தன. அவை. லேக் அவென்யூ என்று சொல்லப்பட்ட பகுதி அழகாக அமைந்திருந்தது. நகரின் நடு மையத்தில் வட்ட வடிவமான ஏரியைச் சுற்றி ஒரே அளவான மாடி வீடுகள் அந்த இடத்தின் வனப்பையே அதிகப்படுத்துவனபோல் ஒத்த அமைப்போடு சீராக இலங்கின. நகரின் அழகுக்காக ஏரியைச் சுற்றியுள்ள லேக் சர்க்கிளில் வீடு கட்டுகிறவர்கள் யாராக இருந்தாலும் ஒரே பிளானில் ஒரே திட்டத்தோடு தான் வீடுகளைக் கட்டவேண்டும் என்று மல்லிகைப் பந்தல் நகரவையில் சட்டம் இருப்பதாகச் சத்தியமூர்த்தி கேள்விப்பட்டிருந்தான். எந்த இடத்தில் ஆரம்பித்தாலும் மறுபடியும் அந்த இடத்துக்கே வந்துமுடிகிறரிற் போல் வட்டவடிவமான ஏரியின் கரையில் ஏரிக்கும் வீடுகளுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/222&oldid=595263" இலிருந்து மீள்விக்கப்பட்டது