பக்கம்:பொன் விலங்கு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 227

செய்திருக்கும் மல்லிகைப் பந்தல் நகரசபையை வாழ்த்தியது அவன் உள்ளம். நீராடிவிட்டுத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவன் கையில் பிளாஸ்க்குடன் அறை வாசலில் சாய்ந்தாற்போல் நின்று கொண்டிருந்த பாரதியைச் சந்தித்தான். கூச்சமும் பயமுமாக அந்தக் கோலத்தில் அவளைக் கடந்து அறைக்குள் போவதற்கே திகைத்துத் தயங்கினான் அவன். சாதாரணமாக ஆண் பிள்ளைகளுக்கு முன்னிலையிலே திறந்த மார்போடு நிற்பதையோ, நடப்பதையோ கூட விரும்பாதவன் இப்போது அந்தப் பெண்ணுக்கு முன்பாக இன்னும் கூசி நின்றான். பாரதியும் அந்தநிலையில் அவனிடம் என்ன பேசுவதென்று தோன்றாமல் நாணித் தயங்கினாள்.

ஈரம்பட்டுச்செந்தாமரைப் பூக்களாகச்சிவந்திருந்த அவனுடைய பாதங்களையும் இழைத்த சந்தனத் தண்டு போல் மினுமினுக்கும் பொன்னிறத் தோள்களையும் பாராததுபோல் பார்த்து மறுபடியும் பார்க்கத் தவிக்கும் கண்களோடு நின்று கொண்டிருந்தாள் அவள். நாணித் தலையைக் குனிந்து கொள்ளும் பாவனையில் அவனுடைய தங்கத் திருவடிகளையும் அவற்றில் வெண்முத்துப் பதித்தாற்போன்ற நகங்களையும் அவள் சுலபமாகக் காணமுடிந்தது. அந்தக் கால்கள் குளியலறையிலிருந்து நடந்து வந்த வழியெல்லாம் சித்திரம் பதித்தாற்போல் நீர்ப் பிரதிகளில் பாதக் கோலமாக பதிந்திருந்தன. கண்ணன் பிறப்புக்கு மாக்கோலம்போட்டதுபோல் அளவாகத் தெரிந்த அந்த நீர்ப் பிரதிகளை ஒடிப்போய் இரண்டு கைகளாலும் தொட்டுக் கண்களில் ஒத்திக்கொண்டுவிடவேண்டும்போலத்தவித்தாள் அவள். பொன்னில் வார்த்துக் குழைத்தெடுத்தாற்போன்ற அந்தத் தோள்களை இன்னொருமுறை எப்படியும் பார்த்துவிடவேண்டுமென்று அவள்தன் அழகிய கண்களின் பார்வையை நிமிர்த்தி ஓரமாகச் சாய்த்தபோது அவன் தன்கையில் பிழிந்து வைத்திருந்த ஈரத்துண்டை மெல்ல உதறி மேலே போர்த்திக் கொண்டிருந்தான். ஆவலோடு கண்களைத் திருப்பிய அவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அந்த நிலையில், பாரதிக்கு ஒரு கவிதை நினைவு வந்தது. அம்பிகாபதி-அமராவதி கதையை நவீன காவியமாக எழுதி வெளியிட்டிருந்தார் நவநீத கவி என்ற கவி. அவர் ஒரு மறுமலர்ச்சித்தமிழ்க்கவிஞர். அதில் ஒரு பாட்டு பாரதிக்கு மனப்பாடமே ஆகியிருந்தது. அவளுக்கு மிகவும் பிடித்த பாட்டு அது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/229&oldid=595277" இலிருந்து மீள்விக்கப்பட்டது