பக்கம்:பொன் விலங்கு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

21

அந்த அறையையும், அதை நிரப்பியிருந்த பிரும்மாண்டமான புத்தக அலமாரிகளையும், அறைக்குள்ளிருந்தே வீட்டுக்குள் போவதற்காக உட்பக்கமாய் அமைந்திருந்த வாயிலில் தொங்கிய கிளிகள் எழுதிய துணித் திரைச்சீலையையும் சலவைக் கல் பதித்த தரையையும் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி, அதே நேரத்தில் அநுபவமும் படிப்பும் முதுமையும் நிறைந்த பூபதி அவர்களின் கண்கள் தன்னைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருப்பதையும் அவன் கண்டான். யாரோ நெருங்கிய விருந்தாளியை விசாரிப்பதுபோல் கேள்வி ஆரம்பமாயிற்று.

"ஹவ் டூ யூ ஃபைண்ட் திஸ் ப்ளேஸ்?" (இந்த ஊர் எப்படி இருக்கிறது?)

"வெரி நைஸ்.லோ ப்யூட்டிஃபுல்" (மிக நேர்த்தியாக இருக்கிறது. நிரம்ப அழகாயிருக்கிறது) என்று சிறிதும் இடைவெளி விடாமல் சுபாவமாகப் பதில் சொன்னான் சத்தியமூர்த்தி. மீண்டும் சில கணங்கள் மெளனமாக அவன் முகத்தைப் பார்த்தார் அவர். அப்படிப் பார்த்த பின் சிரித்துக்கொண்டே மேலும் சொன்னார்:

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! நீங்கள் என்னுடைய கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக வேலை பார்ப்பதற்கு விண்ணப்பம் போட்டியிருக்கிறீர்கள். உங்களிடம் நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு 'இண்டர்வியூ' செய்வது முறையில்லை. இனிமேல் எல்லாம் தமிழிலேயே கேட்கப்போகிறேன்..."

"அதனாலென்ன சார்? எந்த மொழியில் பேசினாலும் பேச நினைக்குமுன் உருவாகிய மனத்தின் கருத்து ஒன்றாகத்தான் இருக்கும்"-என்று சத்தியமூர்த்தி பதில் சொன்னான். அவர் இந்தப் பதிலைக் கேட்டு அயர்ந்து போயிருக்க வேண்டும். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மேலும் அவனைக் கேட்டார் அவர். "நீங்கள் இப்போதுதான் பஸ்ஸிலிருந்து இறங்கி நேரே இங்கு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்..."

"ஆமாம்! நேற்று மாலை கடைசி பஸ் தவறி விட்டது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/23&oldid=1405641" இலிருந்து மீள்விக்கப்பட்டது