பக்கம்:பொன் விலங்கு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 241

'உங்களுக்குத் தெரியுமோ மிஸ்டர் சத்தியமூர்த்தி? எல்லா லெக்சரர்களும் சேர்ந்து நம்முடைய பிரின்ஸ்பாலுக்கு 'க்ரொகடைல் (முதலை) என்று பேர் வைத்திருக்கிறோம். அந்த முதலையின் ரூம் பக்கம் போனால் அப்புறம் ஒரே கஜேந்திர மோட்சம் தான். அப்படியே ஆளைக் கவ்விக்குதறி விடும் குதறி. கடிபட்டவர் எந்த நாராயணமூர்த்தியைக் கூவி அழைத்தும் பயனில்லை. ஹெட்கிளார்க் பெரிய முதலைக்கு அநுசரணையாக இருக்கும் ஒரு குட்டி முதலை." -

'ஆனால்...இராகுகாலம் குளிகைகாலம் சரிபார்த்துக் கொண்டு அப்புறம் கடிக்கிற குட்டி முதலை என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டு சிரித்தான் சத்தியமூர்த்தி, மல்லிகைப் பந்தல் கல்லூரியைப் பற்றி நாடு முழுதும் நல்ல பெயர் பரவியிருந்தாலும் அங்கேயும் உள் அரசியல் நிறைந்திருப்பது அங்கு வந்து சேர்ந்த முதல் தினமாகிய அன்றே சிறிது சிறிதாகப் புரிந்தது அவனுக்கு. அலைகளே இல்லாத சமுத்திரம் எங்குமே இருக்க முடியாதென்று முடிவுக்கு வந்தான் சத்தியமூர்த்தி, இடம் காற்று முதலியவற்றுக்கு ஏற்பச்சிறிய அலைகளாகவோ பெரிய அலைகளாகவோ எப்படியும் அலைகள் இருப்பதுதான் கடலின் இலட்சணம் போலும் என்று எண்ணி மன அமைதி பெற முயன்றான் அவன்.

'முதல் தரமான மனிதர்கள் கருத்துக்களைப் பற்றிப் பேசி விவாதிக்கிறார்கள். சாதாரணமான மனிதர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசி விவாதிக்கிறார்கள். மட்டரகமான மனிதர்கள் மட்டுமே தனி நபர்களைப் பற்றிப் புறம் பேசி விவாதிக்கிறார்கள் என்று ஒரு சீனப் பழமொழி உண்டு. சத்தியமூர்த்தி இப்போது அந்தப் பழமொழியை நினைவு கூர்ந்தான். சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனைப் பற்றிச் சுதந்திரமாகப் பேசி விமர்சனம் செய்யும் உரிமை தனக்கு வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அதே சமயத்தில் தன்னைப் பற்றி பிறர் அப்படி விமர்சனம் செய்ய ஆசைப்படுவதை மட்டும் அவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. பிறரைப் புரிந்து கொள்வதையும் பிறரைப் பற்றிச்சிந்திப்பதையும் சத்தியமூர்த்தி ஒருபோதும் வெறுத்ததில்லை. அவனே பலரைப் பற்றி அப்படிப் புரிந்து கொள்ள முயன்று சிந்தித்திருக்கிறான். ஆனால் ஒவ்வொருவரையும் பற்றி விமர்சிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/243&oldid=595309" இலிருந்து மீள்விக்கப்பட்டது