பக்கம்:பொன் விலங்கு.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பொன் விலங்கு

பழகுவதும், உலகத்தின் சமுதாய மொழியாக வளர்ந்து வீறு பெற்றுவிட்ட ஆங்கிலத்தை எப்படிமதிக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும். இந்த நாட்டின் பிரதேச மொழிகள் வளருவதற்கு ஆங்கிலம் ஒருபோதும் தடையாக இராதென்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். அதே சமயத்தில் அவரவர்களுடைய தாய்மொழியை மதிக்கவும் தெரிய வேண்டும்" என்று மொழிப்பிரச்சினையைப் பற்றித் தைரியமாக விளக்கம் சொல்லிவிட்டு, அந்தக் கல்லூரியின் சிறப்பியல்புகளாகத் தான் கேள்விப்பட்டிருந்தவற்றைச் சொல்லி "அப்படிப்பட்ட கல்லூரியில் நானும் பணிபுரிய வந்திருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்" என்பதாகப் பேசி முடித்தான் சத்தியமூர்த்தி. அவனுடைய கணிரென்ற குரல் ஒலித்து நின்ற போதுதான் அந்தக் கூட்டம் அதுவரை எவ்வளவு அமைதியாயிருந்து கேட்டதென்பது புரிந்தது. முடித்துவிட்டுத் தன் இடத்துக்கு திரும்பியபோது, 'என்னுடைய பேச்சால் முதன் முதலாக ஆங்கிலத்தில் பேசிய கல்லூரி முதல்வரும், பூபதியும் மனம் புண்பட்டிருக்கலாமோ? என்ற சிறிய சந்தேகமும் அவனுள் கிளர்ந்தது. அவ்வாறு மனம் புண்பட்டிருந்தாலும் பரவாயில்லை. பிறர் மனம் புண்படுமே என்பதற்காக உண்மையை மறைத்துப் போலியாகச் சிரித்துவிட்டு மேலே போய்விடுகிற பழக்கத்துக்கு இனியாவது முடிவு கட்டவேண்டும். நான் செய்தது சரிதான் என்று அடுத்த கணம் அவன் மனமே அவனைப் பாராட்டவும் செய்தது. விருந்துக் கூட்டம் முடிந்ததும், பூபதியோ, கல்லூரி முதல்வரோ தன்னைச் சந்தித்துக் கடுமையாகக் கோபித்துக் கொள்வார்கள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவன் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாகப் பூபதி அவனருகில் வந்து அவனைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். "நீங்கள் சொல்வதை நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன் மிஸ்டர் சத்தியமூர்த்தி பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட காரணத்தினால் தமிழ் நன்றாகத் தெரிந்தவர்களுக்கிடையேயும் என்னைப் போன்றவர்கள் ஆங்கிலத்தில் பேசவேண்டியிருக்கிறது. இனியாவது அதை நாங்கள் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். சில சமயங்களில் ஆங்கிலமே தெரியாதவர்களுக்கு முன்னால்கூட ஆங்கிலத்தில்தான் பேச வருகிறது. நமக்குத் தெரியும் என்று காட்டிப் பிறரை மருட்டுவதற்காக ஒரு மொழியைப் பேசலாகாது. மொழிப் பழக்கமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/254&oldid=595333" இலிருந்து மீள்விக்கப்பட்டது