பக்கம்:பொன் விலங்கு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பொன் விலங்கு

இன்னும் நன்றாகச் சொல்ல வேண்டுமானால் வைகறையில் ஒலிக்கும் பூபாளத்தைப் போல அந்த நேரத்தின் ஒரே அழகு தானேயாய், அந்த இடத்தின் ஒரே அழகு தானேயாய் அங்கு வந்து நின்றாள் அந்தப் பெண்.

"என் மகள் பாரதி..." என்று சத்தியமூர்த்தியிடம் சொல்லிவிட்டுப் பெண்ணின் பக்கமாய்த் திரும்பி, "இவர் நம்முடைய கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராவதற்காக விண்ணப்பம் போட்டிருக்கிறார். பெயர் சத்தியமூர்த்தி" என்று ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார் பூபதி. முதற் பார்வையின் முதற்கணத்திலேயே தன்னியல்பாக நேர்ந்து முடிந்துவிடுகிற பல அறிமுகங்கள் பெயரும் ஊரும் சொல்லாமலே கவனிக்க வேண்டுமென்ற கவர்ச்சியிலோ, ஆர்வத்திலோ, தற்செயலாக நேர்ந்தாலும் நடுவில் ஒருவர் இருந்து பேசியோ, புனைந்துரைத்தோ, செய்து வைக்காது இயற்கையாக நேரும் அந்த அறிமுகமே முதன்மையானதாயிருக்கிறது. அவளுடைய கண்கள் தாமாகவே முன்சென்று தரையில் பூத்துக் கிடக்கும் செந்தாமரைகளாய்த் தெரிந்த அந்தப் பாதங்களை முதன்முதலில் தனக்கு அறிமுகம் செய்து கொண்டன. அவனுடைய கண்களோ கிளிகள் பறக்கும் திரையின் நடுவே வண்டுகள் பறப்பதுபோல் துறுதுறுவென்ற கண்களோடு தெரிந்த அந்தக் கவர்ச்சிகரமான முகத்தை அறிமுகம் செய்து கொண்டன. அதற்குப் பிறகு இரண்டாவதாக யார் இன்னாரென்று நடுவில் வேறொருவர் சொல்லி விளக்கிச் செய்து வைத்த அறிமுகம்தான் செயற்கையாயிருந்தது.

பெண்ணிடம் ஏதோ சொல்லி அவளை உள்ளே அனுப்பிய பின் மறுபடியும் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி இண்டர்வ்யூவைத் தொடர்ந்தார் பூபதி. கண்டிப்பாகப் பேசுவதுபோல் அவருடைய பேச்சு இருந்தாலும், அவர் அவனுடனே உரையாடும் நேரத்தை வளர்த்துக்கொண்டு போக விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி எங்கோ ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்த மலைநாட்டு நகரத்தில் ஒரு கல்லூரியை நான் எதற்காக நடத்திக் கொண்டிருக்கிறேன் தெரியுமா? கல்வியை வளர்ப்பதைவிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/26&oldid=1405650" இலிருந்து மீள்விக்கப்பட்டது