பக்கம்:பொன் விலங்கு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பொன் விலங்கு

மொழியின் மேல் மதிப்பு இருப்பது எப்படிக் குறையாகும்? ஒரு குறிப்பிட்ட இனத்தாரைப் பற்றி எப்போதோ, எதற்காகவோ ஏற்பட்ட ஓர் அபிப்பிராயத்தை அந்த இனம் மாறி வளர்ந்துவிட்ட பின்பும் நிரந்தர வழக்கமாக்கிக் கொள்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் என் தாய்மொழியை மதித்து வணங்குகிறேன். மற்ற மொழிகளை மதிக்கிறேன்."

தன் முகத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் ஒளிர இந்த வார்த்தைகளைச் சத்தியமூர்த்தி கூறியபோது கல்லூரி முதல்வரும் அதிபர் பூபதியும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டார்கள். ஒளி படைத்த கண்களில் உணர்ச்சியின் சாயல்கள் நன்கு தெரியும்படிதான் வாதிடுகிற விஷயம் எதுவோ அதில் சிரத்தையும், கவனமும், அழுத்தமும் கொண்டு சத்தியமூர்த்தி விவாதிக்கும் நயத்தை அந்தரங்கமாகத் தமக்குள் இரசித்துக் கொண்டிருந்தார் பூபதி. இப்படித் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், தெளிவாக விவாதிக்கவும் முடிந்த இளைஞர் பலர் இந்த நாட்டுக்கு இன்று தேவை என்று நினைக்கிறவர் பூபதி. அதனால்தான் சத்தியமூர்த்தியின் பேச்சு அவரைக் கவர்ந்தது. அப்படிக் கவர்ந்தாலும் அந்தக் கவர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடுமையாக இருப்பவர்போல் அவனிடம் மேலும் மேலும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.

பேச்சுக்கு நடுவே அவரது மகள் பாரதி ட்ரேயில் தேநீர் கொணர்ந்து மூவருக்கும் அளித்தாள். விளையாடும் அந்தப் பட்டுக் கை தேநீர்க் கோப்பையைப் பீங்கான் தட்டுடன் எடுத்து நீட்டியபோது ஒரு கணம் தனக்கு மிக அருகில் தெரிந்த அந்தத் தோற்றத்தின் அழகைக் கவனித்தான் சத்தியமூர்த்தி.

மகிழ்ச்சி பூத்து மலரும் குறுகுறுப்பான விழிகள். அந்த விழிகளே இதழ்களின் செயலைச் செய்து சிரிக்கும் நயம். இரசம் தளும்பி நிற்க ஈரச்சாயல் தெரியும் சிவப்புத் திராட்சைக் கனிபோல் இதழ்கள். அந்த இதழ்களின் செம்மை மினுமினுப்பில் ஒரு மயக்கும் தன்மை. மொத்தத்தில் இருளை அள்ளிப் பூசிக்கொண்டு எதிரே வந்து நிற்கும் மின்னலைப்போல் இவள் அந்தக் கருநீலப் புடவையை உடுத்திய கோலத்தில் தோற்றமளித்துக் கொண்டிருந்தாள். கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/28&oldid=1405651" இலிருந்து மீள்விக்கப்பட்டது