பக்கம்:பொன் விலங்கு.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 பொன் விலங்கு

அதற்கு நியமிக்க வேண்டாம் என்றும் முதல்வர் நிர்வாகியிடம் கடுமையாக எதிர்த்ததாகவும், அந்த எதிர்ப்பையும் மீறிக்கொண்டு பூபதி தன்னை உதவி வார்டனாக நியமித்ததாகவும் சத்தியமூர்த்தி கேள்விப்பட்டு அறிந்திருந்தான். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்து முதல்வரின் மனத்தில் தன்மேல் எவ்வளவு வைராக்கியத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் என்பதும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கைக்குப் பின்னர் எல்லா ஆசிரியர்களும் கையெழுத்துடன் வந்த நேரமும் குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது. சத்தியமூர்த்தியும் இரண்டு மூன்று நாட்கள் கையெழுத்துடனே நேரமும் எழுதினான். நான்காவது நாள் ஏதோ ஒரு திட்டமான எண்ணத்துடன் அவன் நேரம் போடுவதை நிறுத்திவிட்டான். அன்று காலை பதினொரு மணி சுமாருக்கு ஆசிரியர் அறையில் உட்கார்ந்திருந்த சத்தியமூர்த்தியைத் தேடிக்கொண்டு கல்லூரி முதல்வரின் ஊழியன் (பியூன்) வந்து சேர்ந்தான். அவ்வாறு அவன் வருவதை ஒவ்வொரு விநாடியும் சத்தியமூர்த்தி எதிர்பார்த்துக் கொண்டுதான் காத்திருந்தான்.

'சார்! இதிலே நீங்க வந்த டயம் போடலியாம்; போட்டு வாங்கியாரச் சொல்லி ஹெட்கிளார்க் கொடுத்தனுப்பினாரு" என்று கையோடு கொண்டு வந்திருந்த அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரைச் சத்தியமூர்த்தியிடம் நீட்டினான் அந்த ஊழியன். உண்மையையும் நியாயத்தையும் காரணமாகக் கொண்டு எதிர்க்கவும் சமாளிக்கவும் நேர்கிற எந்த இடத்திலும் சத்தியமூர்த்தி சிறிதும் தலை குனியாமல் நிமிர்ந்து நின்றிருக்கிறான். இன்றும் அப்படி நிமிர்ந்து நிற்கத் தனக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்ததாகத்தான் அவனால் நினைக்க முடிந்தது.

"நேரம் குறிப்பிடுவதற்கில்லை என்று போய்ச் சொல்லு' என்பதாக அவன் உரத்த குரலில் பதில் கூறி ஊழியனை முகத்தில் அடித்தாற்போல் திருப்பி அனுப்பிய போது, ஆசிரியர் அறையில் உட்கார்ந்திருந்த மற்ற ஆசிரியர்கள் ஏதோ பெரிய சண்டை வரப்போகிறதென்ற பொதுவான மகிழ்ச்சியுடனும், தணியாத பயத்துடனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் மற்றவர்களுடைய பிரச்சினைகளை வம்புத்தன மான மகிழ்ச்சியோடு பேசி இரசித்துச் சிரிப்பதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/294&oldid=595421" இலிருந்து மீள்விக்கப்பட்டது