பக்கம்:பொன் விலங்கு.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 பொன் விலங்கு

பார்த்தாலும் அமைதியும் பக்குவமில்லாத இரசிகர்களுக்குமுன் ஆடுவதில் சலிப்பான அநுபவங்களே மீதமிருக்க முடியுமென்று தோன்றியது. ஆகவே எப்படியாவது அந்த ஒருநாள் கூத்தை ஆடிமுடித்துக்கொண்டு ஊர் திரும்பினால் போதுமென்று நாழிகையை எண்ணிக் கொண்டிருந்தாள் மோகினி, வெயில் மயமான நீண்ட பகல் நேரம் மெல்லமெல்லச் சரிந்தது.

ஒருவிதமாகப் பொழுது சாய்ந்து மாலையும் வந்தது. விதம் விதமாக தைத்துக் கொண்டு வந்திருந்த நாட்டிய உடைகளை யெல்லாம் பெட்டியைத் திறந்து எடுத்துக் கடை விரித்தாள் அம்மா. மோகினி நீராடிவிட்டு வந்து அலங்காரம் செய்துகொள்ளத் தொடங்கினாள். வேர்வை அடங்க வேண்டும் என்பதற்காகவும் ஆடத் தொடங்குமுன் உடம்பில் ஒரு தூய்மையான உணர்ச்சி நிலவ வேண்டும் என்பதற்காகவும் நாட்டியத்துக்குமுன் நீராடிவிடுவது அவள் வழக்கம். இன்ன இன்ன நாட்டியங்களை ஆட வேண்டும் என்று கண்ணாயிரமும் அம்மாவுமாக ஒரு பட்டியல் தயாரித்து மோகினியிடமும் சொல்லியிருந்தார்கள். அதைத் தவிர முன் வரிசையில் அமர்ந்திருக்கிற முக்கியமான பெரிய மனிதர்கள் ஏதாவது விரும்பிக்கேட்டால் அதையும் மறுக்காமல் ஆடவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது மாதிரிக் கலியாண வீட்டு நிகழ்ச்சிகளில் இரசிக்கிறவர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கவனித்தாலும், கவனிக்காமலே நிகழ்ச்சி நடந்து கொண்டிருந் தாலும், கொடுத்த பணத்துக்குக் குறைவில்லாமல் மூன்று-மூன்றரை மணிநேரம் ஆடிவிட வேண்டும் என்பதில் மட்டும் அக்கறை யாயிருப்பார்கள் என்பது மோகினிக்குத் தெரியும். மாலை ஐந்தரை மணியிலிருந்து ஏறக்குறைய இரவு ஒன்பது மணி வரை அன்று அவள் ஆடினாள். நூறு நூற்றைம்பது பேர்கள் பந்தலில் அங்கும் இங்குமாக உட்கார்ந்திருந்தார்கள். மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கூட்டம் எப்படி இருந்தாலும் கலைத் தெய்வத்தை மதித்துச் சிரத்தையாகவே ஆடினாள் அவள் வர்ணம், பதம், தில்லானா-எல்லாம் வகைக்கு ஒன்றாக ஆடினாள். அருணாசலக் கவியின் இராம நாடகக் கீர்த்தனையில் ஒன்றையும் கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன சரித்திரக் கீர்த்தனையில் ஒன்றையும் ஆடியபோது அவள் தன்னை மறந்த இலயிப்புடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/310&oldid=595459" இலிருந்து மீள்விக்கப்பட்டது