பக்கம்:பொன் விலங்கு.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 311

'அறிமுகம்' என்ற தொடருக்கு மெய்யான பொருள்தான் என்னவாக இருக்க முடியும்? முகத்துக்கு முகம் அடையாளம் தெரிந்து அறிந்து கொள்வது மட்டும் அறிமுகமில்லை. மனத்துக்கு மனம் அடையாளம் தெரிந்து அறிந்து கொள்வதுதான் அறிமுகம். சத்தியமூர்த்தி அங்கு வந்து அந்தக் கல்லூரியில் விரிவுரையாளனாகப் பணிபுரியத் தொடங்கியிருந்த சில வாரங்களிலேயே மாணவ மாணவிகளுக்கு நன்றாக அறிமுகமாகியிருந்தான். முகத்தை அறிந்தவர்கள் தவிர அவன் மனத்தை அறிந்த மாணவர்களும் அங்கு ஏராளமாக இருந்தார்கள். முதல் நாள் மாலை ஏரிக்கரையில் அவனோடு அமர்ந்து உரையாடிவிட்டுச் சென்ற மாணவர்கள் கூட்டத்தில் மிகவும் சுறுசுறுப்பான மாணவன் ஒருவன், 'நீங்கள் இந்தக் கல்லூரிக்கு மட்டும் பேராசிரியர் இல்லை! பல விதங்களில் சமூகத்துக்கே பேராசிரியராய் ஆகிற தகுதி உங்களுக்கு இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள்தாம் சமூகத்துக்குப் பேராசிரியராக இலங்க வேண்டும்' என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொல்லியிருந்தான். பிறர் மிகையாகப் புகழும்போது அதற்குப் பதிலாகப் புன்முறுவல் பூத்து அந்தப் புகழ்ச்சியை மறப்பது அவன் வழக்கம். சத்தியமூர்த்தி இப்படியெல்லாம் இந்தப் புகழ்ச்சியைக் கொண்டாடாமல் இருக்கும்போதே அந்தக் கல்லூரி ஆசிரியர்கள் அவன்மேல் பொறாமைப்படுகிறவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

சில நோட்டுப்புத்தகங்களில் ஒருபுறமாகத்தாளைக்கிழித்தால் நாமறியாத மற்றொரு புறத்தையும் அது உதிர்த்து வைத்திருக்கும். இதைப்போல் நம்முடைய ஒரு பக்கத்து விளைவுகள் மற்றொரு பக்கத்தைப் பாதிப்பதுண்டு. சத்தியமூர்த்தியின் புகழும் இப்படி அவனறியாமலே அவனை மற்றொரு பக்கத்தில் பாதித்திருந்தது. சதாகாலமும் அவனைச் சூழ நின்று மாணவர்கள் ஆர்வத்தோடு பேசுவது கல்லூரி முதல்வரிலிருந்து ஆசிரியர்கள்வரை யாருக்கும் பிடிக்கவில்லை. "பையன் ரொம்பவும் 'சீப் பாப்புலாரிட்டிக்கு' (மட்டமான புகழுக்கு) ஆசைப்படறான். எப்பப் பார்த்தாலும் தன்னைச் சுற்றிப் பிள்ளைகளை நெருங்கவிட்டால் கெத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/313&oldid=595463" இலிருந்து மீள்விக்கப்பட்டது