பக்கம்:பொன் விலங்கு.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 பொன் விலங்கு

வந்தால் வார்டனைச் சந்திக்காமல் தன்னுடைய அறைக்குள் நுழைய முடியாது.

குறிப்பிட்ட சம்பவம் நடந்த தினத்துக்கு முன் தினம் இரவு மல்லிகைப் பந்தலிலிருந்து இருபது மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மலைக்காட்டு ஊரில் தன் தந்தையைப் புலி அடித்துப் போட்டுவிட்ட தகவல் தெரிந்து ஓர் அரிஜன மாணவன் இரவோடு இரவாக ஊருக்குப் போக நேர்ந்திருந்தது. அந்த மாணவன் கல்லூரிக் காம்பவுண்டுக்குள்ளேயே இருந்த வார்டனின் வீட்டில் போய்க் கதவைத் தட்டியிருக்கிறான். யாரும் திறக்கவே இல்லை. வார்டன் குடும்பத்தோடு இரண்டாவது ஆட்டம் திரைப்படம் பார்க்கப் போயிருந்தார். வேறு வழியில்லாத காரணத்தால் சத்தியமூர்த்தியின் அறைக்கு வந்து கதவைத் தட்டி அவனிடம் சொல்லிவிட்டுத் தந்தையைப் பறி கொடுத்த துயரம் தாங்காமல் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறியபடி ஊருக்கு ஓடியிருந்தான் அந்த மாணவன். நள்ளிரவில் அந்த மாணவன் வந்து தட்டி எழுப்பியதிலிருந்தும், தந்தையை புலி அடித்துப்போட்டு விட்டதைக் குமுறிக்கொண்டு வரும் அழுகையோடு அந்தப் பையன் கூறிவிட்டுப் போனதிலிருந்தும், சத்தியமூர்த்திக்கு மனம் அதிகமாகவே வேதனையுற்றிருந்தது. அதற்குப் பின்பு அன்றிரவு அவன் தூங்கவேயில்லை. ஆனால் என்ன கொடுமை? மறுநாள் மாலையில் அந்தப் பரிதாபத்துக்குரிய மாணவன் திரும்பி வந்தபேர்து அவனுடைய அறையில் கவுண்டர் லாக் போட்டு மேல்பூட்டு பூட்டியிருந்தார்களாம். வார்டனிடம் போய் விசாரித்ததில் அந்த மாணவன் அன்றிலிருந்து ஒரு வாரத்துக்குள் இருபத்தைந்து ரூபாய் தண்டம் கட்ட வேண்டும் என்றும், யாரிடமும் அனுமதி பெறாமல் விடுதியிலிருந்து வெளியேறிப்போனதற்காக மன்னிப்புக்கேட்க வேண்டுமென்றும் வார்டன் கூறினாராம். உதவி வார்டனிடம் சொல்லி அனுமதி பெற்ற பின்பே தான் சென்றதாக அந்த மாணவன் சொல்லியதைக் கேட்டு வார்டன் எரிந்து விழுந்தாராம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/316&oldid=595469" இலிருந்து மீள்விக்கப்பட்டது