பக்கம்:பொன் விலங்கு.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 பொன் விலங்கு

உல்லாச மாளிகையாய்த் தெரியும் ஒரு பெரிய வீட்டின் பளபளப்பான சலவைக் கல்படிகளில் பாதசரங்களும், கொலுசுகளும், சலங்கையும் ஒலிக்க-ஒலிகளின் இனிமையெல்லாம் ஒன்றாகி நடந்து வருவதுபோல அவசர அவசரமாகப் படி இறங்கி ஓடிவந்து ஒரு பெண் மின்னலாய் எதிர் நின்று அவனை வழி மறிக்கிறாள். அவள் விடுபட்டு இறங்கி வந்த வீட்டிற்குள்ளிருந்து சகலவிதமான வாத்தியங்களின் இனிய ஒலிகளும் அவளைத் தேடி மீண்டும் அழைப்பதுபோல் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த ஒலிகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தன் இதயத்தில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் வேறு ஒர் ஒலிக்கு மதிப்பு அளிக்கிறவளாய் அவனருகே வந்து நின்றாள் அவள். சிறிது நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் கண்கலங்கி, நீர் மல்க நின்றபின் அவள் கீழே குனிந்து, நெடுந் துரத்து வழிநடையால் புழுதி படிந்து பொலிவும் நிறமுமற்றிருந்த அவனுடைய பாதங்களைத் தொட்டுத் தன் கண்களில் ஒத்திக் கொள்கிறாள்.

அந்த நிலையில் அவனுடையதோ பிச்சைக்காரனுக்கேற்ற பஞ்சைக் கோலமாக இருந்தது. அவளுடையதோ தெருவில் இறங்கி வந்து மண்ணின்மேல் நிற்கவே கூசும் அப்சரஸின் அழகுத் தோற்றமாயிருந்தது. எதிரே வந்து நிற்கிறவளை அவன் பார்க்கிற பார்வை விழித்தபின் கனவைப் பார்ப்பதுபோல் வேற்றுமையானதாக இருக்கிறது. அவளுடைய வணக்கத்தையும் அன்பையும் ஏற்றுக்கொள்ளத் தயங்கியவனாக மெல்லிய குரலில் அவன் சொல்கிறான்.

"என்னுடைய புழுதி படிந்த கால்கள் நீ தொழுவதற்குத் தகுதியற்றவை பெண்ணே!"

இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது தன்னுடைய சொல்லும் நாவும் குழறிப்போய்த் தடுமாறுகிறான் அவன். அவளோ பிடிவாதமாக அவனையே தொழுகிறாள்.

"ஐயா! அப்படிச் சொல்லாதீர்கள். இந்தக் கால்களில் வந்து படிந்திருப்பதினாலேயே தூசிக்கும் கூடத் தொழத்தகுந்த மதிப்பு ஏற்படுகிறது" என்று கண்களில் நீர் நெகிழ அவன்கால்களில் வீழ்ந்து கதறுகிறாள்.அவள். -

"இந்த ஏழையைத் தொழுவதனால் ஒரு பயனுமில்லை" என்று தன்னை விடுவித்துக்கொண்டு மேலே நடக்க முயல்கிறான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/332&oldid=595504" இலிருந்து மீள்விக்கப்பட்டது