பக்கம்:பொன் விலங்கு.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 359

"வைஸ் பிரின்ஸிபால் சார் நம்முடைய நிர்வாகி நமது கல்லூரிக் கட்டிடங்களை மிகவும் உறுதியாகப் பக்கா காங்கிரீட் போட்டுக் கட்டியிருக்கிறார். கேவலம் ஒரு புலி கோவிந்தன் மட்டும் முயன்று அவற்றைக் குட்டிச் சுவராக்கிவிட முடியாது. சுவர்களைப் பற்றிய கவலையை விட்டு விட்டு தயவுசெய்து நாளையிலிருந்தாவது மாணவர்களைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பியுங்கள். சுவர்களைக் கூர்க்காக்களும், வாட்ச்மேன்களும் கவனித்துக் கொள்ளுவார்கள்' - என்று குத்தலாகப் பதில் சொல்லத்தான் அவனுடைய நாவு முந்தியது. அந்த மனிதருடைய வயதையும் முதுமையையும் மதித்து இப்படி நினைத்ததை அவன் சிரமப்பட்டு அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. மாலையில் வகுப்புகள் முடிந்து கல்லூரியை விட்டுக் கிளம்புவதற்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகைப் பந்தலில் வந்து படிக்கும் மகேசுவரிதங்கரத்தினம் என்ற பெண்ணும், இன்னொருமானவியும் சத்தியமூர்த்தியைத் தேடி வந்தார்கள். அவர்கள் அவனிடம் விடுத்த வேண்டுகோள் விநோதமாயிருந்தது.

"சார்? 'தமிழ் குரூப்"பில் இந்த ஆண்டில் மாணவிகளாகிய நாங்களும் நாலைந்து பேர் படிக்கிறோம். எங்களில் யாராவது மாணவர் யூனியன் தலைவர் பதவிக்கு ஏன் நிற்கக்கூடாது என்று நானும் இவளுமாகச் சிந்தித்து மிஸ் பாரதியை நிறுத்தலாம் என்ற முடிவுடன் அவள் வீட்டுக்குப் போய்ச் சொன்னோம். அவள் இன்று கல்லூரிக்கு வரவில்லை. எங்களால் ஆன மட்டும் சொல்லிப் பார்த்தும் அவள் கேட்கவில்லை. நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் அவள் நிச்சயமாகக் கேட்பாள். எங்களுக்காக இந்த உதவியை நீங்கள் செய்ய முடியுமா?" என்று மகேசுவரி தங்கரத்தினமும், அவளுடைய தோழியும் தன்னிடம் வந்து வேண்டுகோள் விடுத்தபோது தனக்கும் பாரதிக்கும் அவ்வளவு நெருக்கமான உறவு இருப்பதாக அவர்கள் புரிந்து கொண்டிருப்பதையே ஆத்திரத்தோடும் வெறுப்போடும்தான் அவன் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அந்த வெறுப்பையும் ஆத்திரத்தையும் தன்னுடைய மறுமொழியில் தெரியச் செய்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/361&oldid=595568" இலிருந்து மீள்விக்கப்பட்டது