பக்கம்:பொன் விலங்கு.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 385

உணரும் முறை நவீனமாயிருக்கலாம். அதைத்தான் "மாடர்ன் சென்ஸிபிலிட்டி' என்கிறோம். ஆனால் உணரும் முறை பிறழ்வதாயிருக்கக் கூடாது. பிறழ உணர்வதை மட்டுமே மாடர்ன் சென்ஸியிலிட்டி என்று கூறுவதாயிருந்தால் மாடர்ன் சென்ஸிபிலிட்டி என்பதன் ஒரே நோக்கம் பிறழ உணர்தல்' என்று முடிவு செய்ய நேரிடும். "மாடர்ன் சென்ஸிபிலிட்டி இன் பொயட்ரி என்பதைப் பற்றி இன்னொரு நாள் நான் உங்களுக்கு விரிவாகச் சொல்கிறேன்' என்று விளக்கி முடித்ததும் ஞாபகமாகப் பாரதியின் பக்கம் திரும்பி, "இனி உங்கள் சந்தேகத்தைக் கேட்கலாம் மிஸ் பாரதி' என்று சத்தியமூர்த்தி கூறியபோது அவள் எழுந்து நின்று ஒன்றும் கேட்கத் தோன்றாமல் விழித்தாள். அதைக் கண்டு மாணவர்கள் இரைந்து சிரித்து விட்டார்கள். அவளுக்கு அவமானம் பிடுங்கித்தின்றது. டெஸ்க்கிலிருந்து தன் புத்தகங்களை அவசரம் அவசரமாக அள்ளிக்கொண்டு முகம் சிவந்து போய் உதடுகள் துடிதுடிக்க வகுப்பறையிலிருந்து வெளியேறி விட்டாள் அவள்

வகுப்பறையிலிருந்து வெளியேறிச் செல்லும்போது அவள் தலை தாழ்ந்து போயிருந்தது. சத்தியமூர்த்திக்கு இதைப் பார்க்க வேதனையாயிருந்தது. பெரிதாக என்ன நடந்துவிட்டது? எதற்காக இந்தப் பெண் நடுவகுப்பில் பாட வேளை முடிவதற்குள் சொல்லாமல் கொள்ளாமல் இப்படி எழுந்து போகிறாள்? என்றெண்ணி அவன் வருந்தினான். வகுப்பில் பாரதிக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவியைக் கூப்பிட்டு 'போய் அழைத்து வாருங்கள். எழுந்து வெளியே போகும்படி இப்போது என்ன நடந்துவிட்டது? மாணவர்களில் யாராவது வகையாக மாட்டிக்கொள்ளும்போது மாணவிகளாகிய நீங்களும்தான் சிரிக்கிறீர்கள்! அப்போது அதற்காக உங்களை என்ன செய்வது? குழந்தைப் புத்தியோடு இருந்தால் நன்றாயில்லை. உங்கள் சிநேகிதியை வகுப்பில் வந்து உட்காரச் சொல்லுங்கள் கல்லூரி யூனியன் தலைவியாக வந்திருக்கிற மாணவியே இப்படி நடந்து கொள்வது சிறிதும் விரும்பத்தக்க தில்லை' என்றான். அந்த மாணவி வெளியே போய்ப் பார்த்துவிட்டு வந்து, "பாரதி காரில் போய் உட்கார்ந்து, விசும்பி விசும்பி அழுது கொண்டிருக்கிறாள் சார். நான் சொல்லியதை அவள் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை...' என்றாள். அதற்குமேல் அந்த நிகழ்ச்சியைப் பெரிதுபடுத்த விரும்பாத சத்தியமூர்த்தி வகுப்பைத் தொடர்ந்தான்.

பொ.வி-25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/387&oldid=595625" இலிருந்து மீள்விக்கப்பட்டது